2,500 வெள்ளி லஞ்சம் பெற்றதாக போலீஸ் சார்ஜென்ட் மீது குற்றச்சாட்டு

அலோர் ஸ்டார், ஜனவரி 26 :

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நபரிடம் இருந்து 2,500 ரிங்கிட் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், போலீஸ் சார்ஜென்ட் ஒருவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

35 வயதான முகமட் நசுலி முகமட் நசாரி என்ற குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டு, நீதிபதி ஹர்மி தாம்ரி முகமட் முன்நிலையில் வாசிக்கப்பட்டபோது, அவர் தான் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார்.

பாலிங்கில் உள்ள ஒரு கடையில் இரண்டு மொபைல் போன்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பணத்தை லஞ்சமாக ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

பாலிங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் பணிபுரியும் முகமட் நசுலி, டிசம்பர் 3, 2019 அன்று மாலை 4.27 மணியளவில் பாலிங் மாவட்ட சுகாதார அலுவலக ஆய்வாளர் பிரிவு அலுவலகத்தின் வாகன நிறுத்துமிடப் பகுதியில், பெரோடுவா ஆக்ஸியா காரில் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) சட்டம் 2009 இன் பிரிவு 17 (a) இன் கீழ் அவர் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது, இது அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஐந்து மடங்கு லஞ்சத்தொகைக்கு குறையாத அபராதம் அல்லது RM10,000 அபராதம் விதிக்க வழி செய்கிறது.

நீதிமன்றம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு ஆள் பிணையுடன் RM8,000 ஜாமீன் வழங்கியது அத்தோடு வழக்கின் மறு தேதியாக மார்ச் 7 ஆம் தேதியை குறிப்பிட்டது.

MACC துணை அரசு வழக்கறிஞர் தான் சேவ் பிங் வழக்கை நடத்தினார், குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக ஆலிஃப் சுல்கேப்ளி ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here