கோத்தா திங்கியில் மனிதக் கடத்தல் கும்பல் முறியடிப்பு; மலேசியர் உட்பட 14 பேர் கைது!

கோலாலம்பூர்:

ஜொகூர், கோத்தா திங்கி பகுதியில் மனிதக் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கருதப்படும் கும்பலை முறியடித்த போலீசார், 13 இந்தோனேசியர்களையும் , ஒரு உள்நாட்டு ஆட வரையும் கைது செய்துள்ளனர்.

சுங்கை ரெங்கிட் கடற்கரை மற்றும் ஃபெல்டா ஆயர் தாவார் பகுதிகளில் கடந்த ஞாயிறு நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை நடத்தப்பட்ட இந்த அதிரடி வேட்டையில், முறையான பயண ஆவணங்கள் இன்றி நாட்டிற்குள் நுழைந்த 11 ஆண்களும், ஒரு பெண்ணும் பிடிபட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரிண்டெண்டென்ட் யூசோப் ஓத்மான் தெரிவித்தார்.

இக்கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் மலேசிய ஆடவரும், அவருக்கு உதவிய மேலும் இரு இந்தோனேசியர்களும் தனித்தனி இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2007-ஆம் ஆண்டு மனிதக் கடத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் குடி நுழைவு சட்டத்தின் கீழ் இவ்வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வேளையில், பிடிபட்டவர்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை அல்லது பிரம்படி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here