ஈப்போ, ஜனவரி 30 :
நகரின் குடியிருப்பு பகுதிகளில் டுரியான் மரங்களை நடுவதற்கு குடியிருப்பாளர்களுக்கு அனுமதியில்லை என்று ஈப்போ நகர சபை (MBI) எச்சரித்துள்ளது.
நகர மேயர் டத்தோ ருமைசி பஹாரின் இது பற்றிக் கூறும்போது, இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் டுரியான் மரங்களை நடுவது என்பது, ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்களை மீறுவதாகவும், குடியிருப்பாளர்கள் அதை மீறினால் அவர்கள் மீது வழக்குத் தொடரப் படலாம் என்றும் கூறினார்.
“எங்களிடம் வழிகாட்டுதல்கள் உள்ளன, அவற்றை மீறுபவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்”.
குடியிருப்பு பகுதிகளில் டுரியான் போன்ற பெரிய மரங்களை நட முடியாது” என்று ஜாலான் சுல்தான் அப்துல் ஜாலீலில் இன்று நடந்த Ipoh Car Free Day நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் குடியிருப்பாளர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதியில் வாணிபப் பயிர்களை மட்டுமே நடுகை செய்ய அனுமதிக்கப்படுவதாக ரூமைசி கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, வழிகாட்டுதல்களில், அனுமதிக்கப்படும் உர வகையின் நிபந்தனையும் உள்ளது.
“உதாரணமாக வழிகாட்டுதல்களில், ஒருவர் முறையற்ற முறையில் உரங்களைப் பயன்படுத்தினால், அதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.
“வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு முதலில் அறிவுரை வழங்குவோம்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இன்று நடந்த Car Free Day நிகழ்ச்சியில், சுமார் 500 பேர் பங்கேற்றதாகவும் இதன்போது அங்கு நிலையான இயக்க நடைமுறைகள் (SOP) பின்பற்றப்பட்டதாகவும் ரூமைசி கூறினார்.