இளைஞர்களை நம்புங்கள்; மக்களின் நம்பிக்கையை காப்பேன்” – 23 வயது பெர்சத்து வேட்பாளர் லீவினேஷ்வரன் முருகன்

(கோகி கருணாநிதி)

போட் டிக்சன்:

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் பெர்சத்து கட்சி சார்பில் போட்டியிடும் 23 வயதான இளம் வேட்பாளர் லீவினேஷ்வரன் முருகன், வயதை வைத்து தலைமைத்துவத்தை மதிப்பிட வேண்டாம் என மக்களிடம் வலியுறுத்தினார்.

பெர்சத்து ஒரு புதிய கட்சியாக இருக்கலாம். ஆனால் அதன் தலைமை புதியதல்ல. முன்னாள் பிரதமரும் பெர்சத்து தலைவருமான தான் ஸ்ரீ முஹிடின் யாசின் போன்ற அனுபவமிக்க தலைவரின் வழிகாட்டுதலில்தான் தாம் அரசியலைக் கற்றதாக அவர் தெரிவித்தார்.

“எனக்கு 23 வயதுதான். ஆனால் இளைஞர்களுக்கும் தலைமை ஏற்கும் திறன் உள்ளது என்பதை நிரூபிக்க இந்த வாய்ப்பை தான் ஸ்ரீ முஹிடின் யாசின் எனக்கு வழங்கியுள்ளார். அந்த நம்பிக்கையை நான் மக்களின் சேவையின் மூலம் காப்பேன்,” என்றார்.

தனது தேர்தல் அறிக்கை, பெர்சத்து கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளுடன் இணைந்து, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையே முக்கிய இலக்காகக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். வேலைவாய்ப்புகள் அதிகரித்தால்தான் குடும்பங்களின் வாழ்க்கைத் தரமும், மாநிலத்தின் பொருளாதாரமும் முன்னேறும் என்றார்.

“எந்த அரசாங்கம் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அறிவித்தாலும், அதை அரசியல் பாராமல் மக்களிடம் கொண்டு சேர்ப்பேன். மக்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் அனைவரையும் சென்றடைவதே எனது கடமை,” என்று அவர் தெரிவித்தார்.

“என்னை நம்புங்கள். இளைஞர்களை நம்புங்கள். வாய்ப்பு கிடைத்தால் மக்களின் குரலாக இருந்து, குறிப்பாக இளைஞர்களின் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக முழுமையாக பாடுபடுவேன்,” என லீவினேஷ்வரன் முருகன் கூறினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பெர்சத்து 24 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. அவற்றில் ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் லீவினேஷ்வரன் முருகன் போட்டியிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here