சனுசியின் பேச்சு குறித்து புகார்: சட்டம் அனைவருக்கும் சமம்; உடனடி நடவடிக்கை அவசியம் – டாக்டர் சத்யபிரகாஷ்

(கோகி கருணாநிதி)

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் சனுசி முகமட் நோர் வெளியிட்டதாகக் கூறப்படும் இனரீதியான கருத்துகள் தொடர்பாக, அரச மலேசிய போலீஸ் படையும் சட்டத்துறைத் தலைவரும் தாமதமின்றி விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலாங்கூர் கெஅடிலான் தேர்தல் இயக்குநர் டாக்டர் சத்யபிரகாஷ் நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் பாதிக்கக்கூடிய எந்தவொரு இனவாதப் பேச்சும் அலட்சியப்படுத்தப்படக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் பிரச்சார மேடையில் சனுசி, “இந்தியர்களுக்கு இந்தியா உள்ளது, சீனர்களுக்கு சீனா உள்ளது; மலாய்க்காரர்களுக்கு இந்த நாடு மட்டுமே உள்ளது” என்ற பொருளில் கருத்து தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வகையான பேச்சுகள் மலேசியாவின் பல்லின ஒற்றுமைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, குறிப்பாக முஸ்லிம் அல்லாத சமூகங்களிடையே அச்சத்தையும் அதிருப்தியையும் உருவாக்கும் என்று டாக்டர் சத்யபிரகாஷ் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தாம் போலீசில் அதிகாரப்பூர்வ புகார் அளித்திருப்பதாகக் கூறிய அவர், இனம், மதம் மற்றும் அரச குடும்பம் (3R) தொடர்பான விவகாரங்களில் சட்டம் பாகுபாடின்றி அனைவருக்கும் ஒரே விதமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

“நாட்டின் அமைதியையும் இன நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டுமெனில், சமூகத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடிய பேச்சுகளுக்கு எதிராக அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் மற்றும் சட்டத்துறையின் மீது முழு நம்பிக்கை வைத்தே இந்தப் புகாரை பதிவு செய்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.

தேர்தல் வெற்றிக்காக இன உணர்வுகளைத் தூண்டும் அரசியல் பேச்சுகள் நாட்டின் ஒற்றுமைக்கு பாதகமானவை என்றும், அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புணர்வுடனும் கட்டுப்பாட்டுடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மலேசியா பல இன, பல மத மக்களின் ஒற்றுமையால் உருவான நாடு என்பதால், தேர்தல் பிரச்சாரங்களிலும் அந்த ஒற்றுமையை வலுப்படுத்தும் கருத்துகளே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று டாக்டர் சத்யபிரகாஷ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here