ஜார்ஜ் டவுன், பிப்ரவரி 2 :
கிளாந்தான், தும்பாட் அருகே வானவில்லின் வண்ணத்தில் புறாக்களை விற்பனை செய்யும் வியாபாரியின் நடவடிக்கைக்கு சஹாபாட் அலாம் மலேசியா (SAM) அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது ஒரு வகையான துஷ்பிரயோகம் என்று வர்ணித்த SAM தலைவர் மீனாட்சி ராமன், இவ்வர்ணம் பூசிய பறவைகளை வாங்க வேண்டாம் என்றும் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
“இது விலங்குகளுக்கு எதிரான வன்முறைச் செயல்” என்று அவர் கூறினார்.
மீனாட்சியின் கூற்றுப்படி, புறாக்களுக்கு இயற்கையாகவே உடல் முழுவதும் நிறமிகள் இருக்கும்.
“பணம் சம்பாதிப்பதற்காக மற்றும் வியாபார நோக்கத்திற்காக புறாவின் இறகுகளில் நிற வர்ணங்களை பூசி விற்பது அதன் உரிமையை மீறுவதாகும்.
“புறாவின் இறகுகளுக்கு ஏன் சாயம் பூச வேண்டும்? “மனிதர்கள் தலைமுடி, மீசை அல்லது தாடிக்கு சாயம் பூசலாம். ஆனால் புறாக்களின் இறகுகளுக்கு ஏன் சாயப் பூச்சு?
இயற்கைச் சூழலில் சுற்றித் திரியும் புறாக்களுக்கு ஏன் செயற்கை சாயம் பூச வேண்டும் என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.
இறகுகளுக்கு செயற்கைவர்ணம் அடிப்பதால் சாயம் பூசப்படாத பிற புறாக்களுக்கு இடையே இயற்கையான சூழல் பாதிக்கப்படுவதாக மீனாட்சி கூறினார்.
“வர்ணம் பூசப்பட்ட புறாக்கள் மற்ற புறாக்களுடன் சேர வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. புறாக்களுக்கு இரசாயன சாயம் பூசுவது தொல்லை தரும் ஒரு செயல். இது இயற்கை சமநிலையை பாதிக்கும்.”
“இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கால்நடை மருத்துவ சேவைகள் துறையை (டிவிஎஸ்) SAM வலியுறுத்துகிறது.
“விலங்குகள் நலச் சட்டம் 2015 (சட்டம் 722) இன் கீழ் தங்கள் விலங்குகளின் நலன் மற்றும் தேவைகளுக்கு உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
“அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விலங்குகள் திணைக்களத்திற்கு உரிமை உள்ளது, இல்லையெனில் வணிகர்கள் புறா இறகுகளுக்கு பல்வேறு வண்ணங்களில் சாயமிடுவதை நிறுத்த மாட்டார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் புறாக்கள் இயற்கையோடு இயைந்து வாழ நாம் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.