கிள்ளான், பிப்ரவரி 8 :
இங்குள்ள மேரு நகரின் பல்பொருள் விற்பனைக் கடையில் உள்ள தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரத்தை (ATM) வெடிக்கச் செய்து, அதிலிருந்த ஏராளமான பணம் இன்று அதிகாலை திருடப்பட்டது.
காலை 8 மணியளவில், கடையின் ஊழியர்கள் கடையை திறக்க முயன்றபோது, கடையின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டும், வெடித்து தகர்க்கப்பட்டு திறந்திருந்த ATM இயந்திரத்தையும் கண்டனர். அதன் பின்னரே இந்தச் சம்பவம் தெரியவந்தது.
வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் எஸ் விஜய ராவ் கூறுகையில், இந்த சம்பவம் அதிகாலை 4.50 மணியளவில் நடந்ததாக நம்பப்படுகிறது என்று கூறினார்.
கண்காணிப்பு கேமராவின் (CCTV) காட்சிகளின் அடிப்படையில், முன் கதவு வழியாக அந்தக் கடைக்குள் நுழைந்த இரு நபர்களால் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
“ இரு சந்தேக நபர்களும் கடைக்குள் இருந்த ATM இயந்திரத்தை வெடிக்கச் செய்து, பின்னர் அங்கிருந்து பணத்துடன் தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.
மேலும், ”திருடப்பட்ட பணத்தின் மதிப்பு இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.
போலீசார் தற்போது சந்தேக நபர்களை மிகத் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், குற்றவியல் சட்டம் பிரிவு 457 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.