ஆளில்லாத வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த RM1.47 மில்லியன் மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்!

ஈப்போ, பிப்ரவரி 9 :

இங்குள்ள பாசீர் பூத்தேயில் உள்ள ஆளில்லாத வீட்டில், நேற்று போலீசார் நடத்திய சோதனையில் 1.47 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பல்வேறு பிராண்டுகள் கொண்ட 10,000க்கும் மேற்பட்ட கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இரவு 8 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில் அட்டைப்பெட்டிகளில் இருந்த 9,600 வெள்ளை சிகரெட்டுகள் மற்றும் சுங்க வரி செலுத்தப்படாததாக நம்பப்படும் 560 கிரெடெக் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

மண்டலம் 1 கடல்சார் போலீஸ் படையின் கமாண்டர், துணை கமிஷனர் ஷாம்சோல் காசிம் கூறுகையில், 24 மணி நேரமாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில், அந்த வீட்டுக்கு யாரும் வராததால், வளாகத்தின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து, போலீசார் உள்ளே சென்றனர்.

பேராக் போலீஸ் தலைமையகத்தின் (IPK) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் குழுவுடன் கடல்சார் காவல்துறையின் ஒரு அதிகாரி மற்றும் ஆறு உறுப்பினர்களுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

“வீட்டை மேலும் ஆய்வு செய்ததில், வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையிலுமாக மொத்தம் 199 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகள், உள்ளூர் சந்தைக்கு விநியோகிக்க முயன்றதாக நம்பப்படுகிறது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன், சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 135 (1) (d) இன் கீழ், ஈப்போ மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) குற்றப் புலனாய்வுப் பிரிவில் (BSJ) மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here