ஜோகூர் பாரு, பிப்ரவரி 22 :
மார்ச் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில், நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மஇகா உறுதியாக உள்ளது என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறும் கூட்டத்தில், ஜோகூர் பாரிசான் நேஷனல் (BN) தலைவர் டத்தோஸ்ரீ ஹஸ்னி முகமட்டிடம் இந்த விருப்பம் தெரிவிக்கப்படும் என்றார்.
“ஜோகூர் தேர்தலில் போட்டியிடும் இடங்களின் பங்கீடு குறித்து முடிவெடுப்பதற்காக, நாளை இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. நாங்கள் முன்பு போட்டியிட்ட தொகுதிகளில் தொடர்ந்தும் போட்டியிடுவதற்கான நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளோம்.
“BN கூட்டணியில் நாங்கள் அதிகாரப் பகிர்வு என்ற கருத்தை நடைமுறைப்படுத்துகிறோம், கட்சிக்கும் நாட்டிற்கும் சிறந்தது என்று நாங்கள் நினைக்கும் தேர்வை நாங்கள் செய்வோம்” என்று, இன்று விடாமுயற்சியுடன் கூடிய தொழில்முனைவோர் பங்களிப்பு பிரச்சாரத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு, செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மனித வளத்துறை அமைச்சராகவும் இருக்கும் சரவணன், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் டான்ஸ்ரீ நோ ஓமருடன் கலந்துகொண்டார்.
புக்கிட் பத்து மாநிலத் தொகுதியில் போட்டியிட கூலாய் பிரிவு மஇகா விடுத்த கோரிக்கை குறித்து கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். “யார் வேண்டுமானாலும் தாங்கள் விரும்பும் தொகுதியில் போட்டியிட விண்ணப்பிக்கலாம், ஆனால் இறுதி முடிவை தலைமைதான் முடிவு செய்யும்” என்றார்.
“தேர்தலின் போது, அனைவரும் வேட்பாளராக இருக்க விரும்புகிறார்கள்,ஆனால் இறுதியாக BN தலைமையின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றும் அவர் கூறினார்.