கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் தங்களது பதவிப் பிரமாணத்தை மீறியதன் காரணமாக, அவர்களின் நியமனங்களை உடனடியாக ரத்து செய்து நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்த்துவான் பெசார் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து இன்று (செப்டம்பர் 20) ஸ்ரீ மெனாந்தி அரண்மனையின் அரசப் பிரதான அதிகாரி டத்தோ அசிசி முகமட் அலி வெளியிட்ட அறிக்கையில், 1959-ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு XXXVIII(5)-இன் படி, மந்திரி பெசாரைத் தவிர மற்ற செயல்குழு உறுப்பினர்கள் மாநில ஆட்சியாளரின் விருப்பத்தின் பேரிலேயே பதவியில் நீடிக்க முடியும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாநில ஆட்சியாளரின் முன்னிலையில் எக்சிகோ உறுப்பினர்களாகப் பொறுப்பேற்ற போது, அவர்கள் ஆட்சியாளருக்கும் அரச நிறுவனத்திற்கும் விசுவாசமாக நடப்பதாகவும், மாநில அரசியலமைப்பைப் பாதுகாப்பதாகவும் உறுதிமொழி எடுத்திருந்தனர்.
“எனினும், கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி அவர்கள் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் மற்றும் வெளியிட்ட அறிக்கைகள் மூலமாக அந்தப் பிரமாணத்தை அவர்கள் மீறியுள்ளனர். இதன் காரணத்தினாலேயே அவர்களின் நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்படுகின்றன.” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் கடிதம் மூலம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு XXXVIII(2)-இன் படி, புதிய எக்சிகோ உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்து ஆட்சியாளரின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்குமாறு மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
மேலும், இந்த மாற்றத்தின் போது நெகிரி செம்பிலான் மாநில நிர்வாகம் எவ்விதத் தடங்களுமின்றி சீராக நடைபெறுவதையும், பொதுமக்களின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதையும் மந்திரி பெசார் உறுதி செய்ய வேண்டும் என்றும் அரண்மனை உத்தரவிட்டுள்ளது.
















