கோலக்கிராயில் 3 ஆறுகளில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவை தாண்டியுள்ளது

கோத்தா பாரு, பிப்ரவரி 25 :

நேற்று முதல் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து, கோலக்கிராயில் உள்ள மூன்று ஆறுகள் இன்று காலை அவற்றின் எச்சரிக்கை அளவை விட அதிகமாக பதிவாகியுள்ளன.

சுங்கை நல் 23.67 மீட்டர் , கம்போங் துவாலாங்கில் உள்ள சுங்கை லெபிர் 33.24 மீட்டர் மற்றும் சுங்கை கிளாந்தான் 20.35 மீட்டர் உயரத்திலும் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளன.

கிளாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) இயக்குநர் ஜெய்னல்@ஜைனல் மடாசின் கூறுகையில், இப்பகுதியில் அதிக மழை பெய்ததைத் தொடர்ந்து ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்தது.

“ஆற்று நீரும் மிக வேகமாக உயர்ந்து காணப்படுவதாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இது இவ்வாறு தொடர்ந்தால் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால், தாம் கவலையடைவதாகவும் உள்ளூர் மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.

“கிளாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, குறிப்பாக கோலக்கிராயில், வெள்ளம் ஏற்பட்டால், எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ள, பணியாளர்கள் பலம் மற்றும் தளவாடங்களின் அடிப்படையில் எப்போதும் தயாராக உள்ளது.

“தற்போதைய வானிலை நிலைமைகள் மற்றும் தொடர்ந்து மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) அறிக்கைகள் குறித்தும் நாங்கள் விழிப்புடன் கண்காணித்துக் கொண்டுள்ளோம்” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

கோலக்கிராய் மாவட்டத்தைத் தவிர, குவா மூசாங், ஜெலி மற்றும் பாசீர் மாஸ் போன்ற பிற பகுதிகளிலும் உள்ள ஆறுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன என்றார். ஏனெனில் இது ஆற்றின் மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்படுவதற்கான ஆரம்ப இடங்களாக இருக்கின்றன.

அதுமட்டுமின்றி, கனமழை பெய்யும் போது அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதால், கோத்தா பாருவைச் சுற்றியுள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறேன், என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here