சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. சித்ரா மரணத்துக்கு ஹேம்நாத் காரணம் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், சித்ரா மரண வழக்கிலிருந்து ஹேம்நாத் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், “சித்ராவும் நானும் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். எனக்கும் சித்ராவுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. அவரது தற்கொலைக்கு நான் காரணம் இல்லை,” எனக் கூறி பிணை கேட்டு மனு செய்திருந்தார் அவரின் கணவர் ஹேம்நாத்.
தற்பொழுது அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் இறுதிக்கட்ட வழக்கு விசாரணை சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 10) நடைபெற்றது. இந்த நிலையில், காவல்துறை தரப்பில் போதிய ஆதாரங்கள் மூலம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுவித்துள்ளது.





















