நாட்டின் பல மாநிலங்களில் நாளை வரை தொடர் கனமழை பெய்யும் – மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப்ரவரி 25 :

மலேசியா தீபகற்பத்தில் உள்ள பல மாநிலங்களில் நாளை வரை தொடர் மழை எச்சரிக்கையை (மோசமான வானிலை) மலேசிய வானிலை ஆய்வு மையம் (MET Malaysia) விடுத்துள்ளது.

கிளாந்தான், திரெங்கானு, பகாங், ஜோகூர், பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் முஹமட் ஹெல்மி அப்துல்லா கூறுகையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தென் சீனக் கடலில் 5.13 ° N 107.05 ° E ஆக உள்ளது என்றும் தீபகற்பத்தின் வடமேற்கு நோக்கி நகரும் முன், இன்று பிற்பகல் பகாங் மற்றும் திரெங்கானு மாநில எல்லைகளைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்த நிலைமை பிப்ரவரி 26 வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை மற்றும் பலத்த காற்றை ஏற்படுத்தக்கூடும்.

“சமீபத்திய கணிப்புகள் இந்த அமைப்பு வெப்பமண்டல தாழ்வு நிலைகளுக்கு உயரும் வாய்ப்பு குறைவு என்பதைக் குறிக்கிறது.

“அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் இன்று, வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

சமீபத்திய வானிலை பற்றிய கூடுதல் தகவல்களை பெற மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளம், myCuaca மொபைல் பயன்பாடு மற்றும் MetMalaysia இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகம் மூலம் பெறலாம் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here