உக்ரைன் விவகாரம்: 11 நாடுகள் ஆதரவு; தவிர்த்த இந்தியா -ஐ.நா தீர்மானத்தைத் தோற்கடித்த ரஷ்யா… எப்படி?

ரஷ்யா, சில தினங்களாக உக்ரைன்மீது கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது. உலகின் பல நாடுகள் ரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவித்தாலும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்தது. குறிப்பாக, தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ நெருங்கி, தாக்குதலை நடத்திவருகிறது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,

இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும் அவர், தான் இன்னும் உக்ரைனில்தான் இருக்கிறேன் என வீடியோ வெளியிட்டார். மேலும், ரஷ்யாவின் முதல் இலக்கு தானும் தனது குடும்பத்தினரும்தான் என்றும், உலக நாடுகள் போரை வேடிக்கை மட்டுமே பார்ப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ரஷ்யா உடனடியாக நிபந்தனையின்றி உக்ரைன் எல்லையிலிருந்தும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளிருந்தும் அனைத்து ராணுவப் படைகளையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ், “நமது அடிப்படைக் கொள்கைகள் மீதான ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதல் மிகவும் தைரியமானது, மிகவும் வெட்கக்கேடானது, அது நமது சர்வதேச அமைப்பை அச்சுறுத்துகிறது” என்றார்.

ஐநாவுக்கான யுனைடெட் கிங்டம் தூதர் பார்பரா வுட்வார்ட் பேசுகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன்மீது மிகப்பெரிய படையெடுப்பைத் தொடங்கியுள்ளார். அவரின் நோக்கம் அதன் அரசாங்கத்தை அகற்றி, அதன் மக்களை அடிபணிய வைப்பதாகும். இது தற்காப்பு அல்ல. இது அப்பட்டமான ஆக்கிரமிப்பு என்றார்.

ஐ.நா-வுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஜாங் ஜுன் பேசுகையில், அனைத்து மாநிலங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்றும், ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம். உக்ரைன் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே பாலமாக மாற வேண்டும் என்றார்.

ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசுகையில், உக்ரைனில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சம்பவங்களால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது. வன்முறை மற்றும் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மனித உயிர்களை விலையாக வைத்து எந்தத் தீர்வையும் எட்ட முடியாது.

உக்ரைனில் உள்ள ஏராளமான இந்திய மாணவர்களை உள்ளடக்கிய இந்திய சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் ஆழ்ந்த அக்கறைகொண்டிருக்கிறோம். சமகால உலகளாவிய ஒழுங்கு ஐக்கிய நாடுகளின் சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் மாநிலங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து உறுப்பு நாடுகளும், ஆக்கபூர்வமான வழியைக் கண்டுபிடித்துத்தான் இந்தக் கொள்கைகளை மதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகளைத் தீர்த்து வைப்பதற்கான ஒரே பதில் உரையாடல் மட்டுமே, இருப்பினும் இந்த நேரத்தில் அது அச்சுறுத்தலாகத் தோன்றலாம்.

அரசின் ராஜாந்திர வழிகள் கைவிடப்பட்டது வருத்தம் அளிக்கிறது. நாம் அதற்குத் திரும்ப வேண்டும். இந்த அனைத்து காரணங்களுக்காகவும், இந்தத் தீர்மானத்தை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்துள்ளது என்றார்.

ரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தில் மீது உறுப்பு நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன் மூலம் இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும் முடிவை எடுப்பதாகக் தெரிவித்திருக்கிறது. முன்னதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

15 நாடுகளில், 11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தும், ரஷ்யாவுக்கு எதிரான இந்தத் தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது. காரணம், ரஷ்யா தனக்கு உள்ள `வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.

எனினும் உலக அரங்கில் ரஷ்யா தனித்துவிடப்பட்டுள்ளது என்பதை இந்த தீர்மானம் உணர்த்தியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் (Veto Power) எனப்படுவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து (UK), அமெரிக்கா (US) ஆகிய ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம். ஐ.நா அமைக்கப்பட்ட 1946-ம் ஆண்டு முதல் வீட்டோ அதிகாரம், அதாவது தடுத்து நிறுத்தும் அதிகாரம் பெற்ற நாடுகள் என்ற சிறப்பை இந்நாடுகள் பெறுகின்றன.

இதன்படி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றிருந்தாலும், இந்த ஐந்து நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால் அந்தத் தீர்மானம் தோல்வியடையும் என்று ஐ.நா சட்டப் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here