ஜெல்லிஃபிஷ் தாக்கி 14 வயது சிறுவன் மரணம் – ஆஸ்திரேலியாவில் சம்பவம்

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் 14 வயது சிறுவன் பாக்ஸ் ஜெல்லிஃபிஷ் என்ற கொடிய கடல் மீன் வகையின் விழுதுகளில் சிக்கி விஷம் பாய்ந்து உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்க் ஏஞ்சலோ லிக்மாயோ தனது குடும்பத்துடன் மேக்கேக்கு வடக்கே உள்ள எமியோ கடற்கரையில் சனிக்கிழமைக்கு வந்த போது கடலில் ஜெல்லி ஃபிஷ்ஷிடம் சிக்கினார். . அவரது தந்தை, நிக் கினும்தாட், கூரியர் மெயிலிடம் கூறும்போது, தனது மகன் சுமார் 10 நிமிடங்கள் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டிருந்ததாகக் கூறினார், பிறகு அவன் கடற்கரைக்கு ஓடி வந்தபோது, ​​​​2 மீட்டருக்கும் அதிகமான பாக்ஸ் ஜெல்லி பிஷ்ஷின் விழுதுகள் அவனைச் சுற்றியிருந்ததாகக் கூறினார்.

கடலில் தத்தளிப்போரின் உயிரைக் காக்கும் சேவகர்கள் 14 வயது சிறுவன் மார்க்குக்கு உதவ விரைந்தனர் ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் சிறுவன் மேக்கே மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தான்.

கரைகளுக்கு சிறுவனைக் கொண்டு வந்த போது கொடிய விஷமுடைய ஜெல்லி பிஷ்ஷின் விழுதுகள் சிறுவனின் கால்களைச் சுற்றி இறுக்கியிருந்ததை அகற்றினர், ஆனால் அதற்கு முன்னரே சிறுவன் உடல் மீது ஜெல்லி பிஷ்ஷின் அனைத்து கொடிய விஷமும் இறங்கியிருந்தது.

மார்க் தனது தாய் மற்றும் சகோதரியுடன் பிலிப்பைன்ஸிலிருந்து சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். வந்தவுடனேயே மகனை அதிர்ச்சிகரமாக இழ்ந்ததில் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

குடை போன்ற வடிவமுடைய பாக்ஸ் ஜெல்லிமீன்கள் (சிரோனெக்ஸ் ஃப்ளெக்கெரி) உலகிலேயே மிகவும் விஷமுள்ள கடல் விலங்கு. அவற்றின் விழுதுகள் மூன்று மீட்டர் நீளம் வரை விஷம் நிறைந்த ஈட்டிகளால் மூடப்பட்டிருக்கும், அவை நெமடோசிஸ்ட்கள் (nematocysts)என்று அழைக்கப்படுகின்றன.

அவை கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன மற்றும் சவுக்கை போன்ற அடையாளங்களை விட்டுச் செல்கின்றன. அதன் விழுதுகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர் மீது சிக்கிக் கொண்டிருக்கும் இதனை வினிகருடன் அகற்றப்படலாம். ஆனால் அவை கொட்டினால் சில நிமிடங்களில் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் மரணம் ஏற்படலாம்.

அக்டோபர் முதல் மே வரை, மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பவள விரிகுடாவிலிருந்து குயின்ஸ்லாந்தில் உள்ள பண்டாபெர்க் வரை, ஆஸ்திரேலியாவின் வடக்கு முழுவதும் வெதுவெதுப்பான நீரில் பாக்ஸ் ஜெல்லி ஃபிஷ்கள் காணப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here