ஜோகூரின் முன்னேற்றத்தை மாநில அரசாங்கம் உறுதி செய்யும் – மந்திரி பெசார் ஹாஸ்னி முகமட் வாக்குறுதி

இவ்வாண்டிற்கான ஜோகூர் மாநில வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதன் வாயிலாக மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்வதில் மாநில அரசாங்கம் துடிப்புடன் செயல்படுவதாக ஜோகூர் மாநில காபந்து மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமட் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை, புத்ரி வங்சா, தாமான் எக்கோஃபுளோரா பூங்காவில் 2022 தேசிய நிலப்பரப்பு கட்டமைப்பு (லேண்ட்ஸ்கேப்) தின தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியுடன் மந்திரி பெசாரும் கலந்து கொண்டார். வீடமைப்பு , ஊராட்சித் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ ரிசால் மெரிக்கான், கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஶ்ரீ ஷஹிடான் காசிம் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மந்திரி பெசார், நாட்டின் தென் பகுதியில் முக்கிய அனைத்துலக நுழைவாயிலாக ஜோகூர் பாரு நகரம் செயல்பட்டு வருகின்றது.அண்டை நாடான சிங்கப்பூருக்கு மிக அருகில் உள்ளதால் நாட்டின் முன்னேற்றத்திற்கு பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் இந்த நகரம் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஜோகூர் பாரு சமூக, பொருளாதார, உளவியல் ரீதியில் பல மாற்றங்களை கண்டுள்ளது.

இதற்கு முன்னதாக தினமும் நாட்டிற்குள் 250,000 பேர் வந்து செல்லும் முக்கியப் பாதையாக ஜோகூர் விளங்கி வந்தது. ஆனாலும் கோவிட்-19 தொற்று காரணமாக நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதால் சுமார் ஈராண்டுகளாக ஜோகூர் எல்லைப்பகுதி வெறிச்சோடிப் போனது. தற்போது விடிஎல் எனப்படும் தடுப்பூசி அனுமதி தரைவழி பயணம் அனுமதிக்கப்பட்டதை அடுத்து நிலைமை மீட்சி கண்டு வருகிறது.

நாட்டின் பொருளாதார மீட்சி நடவடிக்கைக்கு ஜோகூர் மாநில எல்லை திறப்பு மிக அவசியம் என்பதால் அதுவே மாநில அரசாங்கத்தின் முதன்மை கோரிக்கை அம்சமாகும். நாட்டின் எல்லைப்பகுதிகள் கட்டம் கட்டமாக திறக்கப்படுவது அவசியம். காரணம் எல்லை கதவுகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தால் மாநிலத்தின் சில பகுதிகள் குறிப்பாக ஜோகூர் பாரு நகரின் வளர்ச்சி செயல்பாடுகள் தடைப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற அண்டை நாடுகளுக்கு அருகில் உள்ளதால் ஜோகூர் பாரு நகருக்கு விரிவான முதலீட்டு – சந்தை வாய்ப்புகளும் வருகின்றன. எனவே மத்திய அரசாங்கம், ஜோகூர் பாரு நகரை அதன் தனித் தன்மை,அனைத்துலக முதலீட்டு சந்தையில் பெறக்கூடிய அடைவு நிலைகளை அடிப்படையாக வைத்துப் பரிசீலிக்க வேண்டும்.

இன்னும் அதிகமான முதலீட்டாளர்களை குறிப்பாகத் தெற்கிழக்காசிய நாடுகளை
சேர்ந்த முதலீட்டு தரப்பினரை ஈர்க்க முன்னெடுக்கப்படும் அனைத்து நேர்மறை நடவடிக்கைகளுக்கும், மாநில மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கக்கூடிய அரசாங்கம் என்ற முறையில் நான் ஆதரவு வழங்குவேன் என டத்தோ ஹஸ்னி உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here