போர்ட்டிக்சன், மார்ச் 9 :
அவர்கள் சென்ற பெரோடுவா மைவி கார் சறுக்கி சாலைத்தடுப்பின் மீது மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
போர்ட்டிக்சன் தீயணைப்பு நிலையத் தலைவர் முகமட் ஹைருல் இசாம் மஸ்லான் கூறுகையில், சிரம்பான்-போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 24.8ஆவது கிலோமீட்டரில் நடந்த இந்தச் சம்பவத்தில், பெரோடுவா மைவி கார் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி முதலில் சாலைத்தடுப்பில் மீது மோதி, நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.
“இச்சம்பவம் தொடர்பில் போர்ட்டிக்சன் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவிற்கு, காலை 7 மணியளவில் அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து, கவிழ்ந்த வாகனத்தில் சிக்கிய 20 வயதுடைய ஒரு ஆண் மற்றும் பெண் ஆகிய இருவர் பாதிக்கப்பட்டனர்.
“காருக்குள் மாட்டிக்கொண்டிருந்த பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது, ஆண் தலையில் காயமடைந்திருந்தார். இருப்பினும், இருவரும் வெற்றிகரமாக காருக்குள் இருந்து வெளியே மீட்கப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் மேலதிக சிகிச்சைக்காக போர்ட்டிக்சன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக முகமட் ஹைருல் கூறினார்.