மகளின் கண்முன்னே தாயை இழுத்துச் சென்ற முதலை : கிராம மக்கள் சுற்றி வளைத்ததால் சடலத்தை விட்டுச் சென்றது!

கூச்சிங்:

சரவாக், மிரி அருகே உள்ள பத்து நியா, சுவாய் பாலம் பகுதியில் ஆற்றுமட்டிகளைச் சேகரிக்கச் சென்ற 78 வயது மூதாட்டி ஒருவர் முதலையால் தாக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த மூதாட்டி சம்பாய் அங்காஹ் (Sambai Anggah) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மூதாட்டி சம்பாய் தனது 31 வயது மகளுடன் சுவாய் ஆற்றுப் பகுதியில் படகில் சென்று மட்டிகளைத் தேடிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

படகிலிருந்து ஒரு மீட்டர் தொலைவில் நீரில் நின்றுகொண்டிருந்த மகளின் கண்முன்னே, படகிலிருந்த மூதாட்டியை முதலை திடீரெனக் கவ்வி ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது.

முதலையானது மூதாட்டியை சுமார் 10 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் சென்ற நிலையில், சத்தம் கேட்டுத் திரண்ட கிராம மக்கள் முதலையைச் சுற்றி வளைத்தனர். இதனால் மூதாட்டியை விட்டுவிட்டு முதலை அங்கிருந்து தப்பியோடியது.

பின்னர், ஆற்றில் மிதந்த மூதாட்டியின் உடலைக் கிராம மக்கள் மீட்டு அருகில் உள்ள படகுத்துறைக்குக் கொண்டு வந்தனர்.

காலை 11:26 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்ற பத்து நியா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பகுதியை ஆய்வு செய்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மூதாட்டியின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காகக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here