டத்தோ ஹஸ்னியின் சேவை தொடர வேண்டும் – பிரதமர் கருத்து

எஸ்.வெங்கடேஷ் – கிருஷ்ணன் ராஜூ

பொந்தியான், மார்ச் 9-
பெனுட் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜோகூர் மாநில காபந்து மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முகமட் தனது கடமைகளை சரிவரச் செய்துள்ளார், செய்து வருகின்றார். அவரின் சேவை தொடர வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கருத்துரைத்தார்.

முன்னதாக உயர்கல்வி அமைச்சு ஏற்பாட்டில் பொந்தியான் மைய சமூகக் கல்லூரியின் (KOLEJ KOMUNITI SATELIT) அறிமுக நிகழ்ச்சி பெனூட் பகுதியில் நடைபெற்றது. அதில் சிறப்புப் பிரமுகராக பிரதமர் கலந்துகொண்டார். அவருடன் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ நோராய்னி அகமட், மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முகமட், பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய பிரதமர், 12ஆவது மலேசியத் திட்டத்தில் தொழில்துறையினரின் பணியாளர் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வதில் மாற்று அம்சமாக விளங்குவது தொழில்திறன் கல்வி – பயிற்சி (திவெட்) என்பதனை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

எனவே உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் சமூகக் கல்லூரி, போலிடெக்னிக் கல்வி இலாகா உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சு- அமைப்புகளின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க 6.6 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டில் திவெட் பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்த அரசாங்கம், சமூகக் கல்லூரி-போலிடெக்னிக் கல்வி இலாகாவிற்கு 25 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கியுள்ளது. இதன் வழி 25,000 பேர் இத்திட்டங்களின் மூலம் பலன் பெறுவர் எனக் குறிப்பிட்டார்.

இது தவிர 12ஆவது மலேசியத் திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதுபோல் ஜோகூர் மாநிலத்தில் 4 சமூகக் கல்லூரிகளுக்கு நிரந்தர சுய வளாகம் ஏற்படுத்தித் தரப்படும். பண்டார் தெங்காரா, பாகோ, பாரிட் சூலோங், சிம்பாங் ரெங்காம் சமூகக் கல்லூரிகள் அவையாகும். இதற்கு மொத்தமாக 61.2 மில்லியன் ரிங்கிட் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்நிலையில் மாநில மந்திரி பெசாரின் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. அதுவும் இந்த பெனூட் தொகுதியில் அவரின் நேர்மறையான செயல்பாடுகளை நேரடியாகக் காண முடிகின்றது.

அவரின் சேவைகள் தொடர வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர் இது அமைச்சின் நிகழ்ச்சி, தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி கிடையாது என பிரதமர் தெளிவுபடுத்தினார். அவரின் இந்த சூசகமான பேச்சு அங்கிருந்தவர்களின் கரகோஷத்தைப் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here