ரஷ்யாவின் எண்ணெய் கிடங்கு மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை- உக்ரைன் மறுப்பு

கீவ், ஏப்ரல் 2:

உக்ரைன் மீது ரஷ்ய இராணுவத்தின் போர் தாக்குதல் நீடித்து கொண்டே இருக்கிறது. உக்ரைனில் முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் தீவிரமாக தாக்குதல் தொடுத்து வருகின்றன. அவர்களுக்கு எதிராக உக்ரைன் வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே ரஷ்யாவுக்குள்ளும் உக்ரைன் இராணுவம் முதல் முறையாக நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. ரஷியாவின் பெகொரோட் நகரில் எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைனின் ஹெலிகாப்டரில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டு தாக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்தது.

இந்நிலையில் ரஷ்ய எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தவில்லை என்று உக்ரைன் மறுத்துள்ளது.

இதுகுறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறும்போது, ‘ரஷ்யாவின் பெல்கொ ரோட்டில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுவதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியவில்லை.

எல்லா இராணுவ தகவல்களும் என்னிடம் இல்லாததால் அதனை என்னால் உறுதிபடுத்த முடியவில்லை. துருக்கியில் அமைதி பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட எங்கள் திட்டங்களுக்கு ரஷ்யாவின் முறையான பதிலுக்காக காத்து இருந்தாலும் பேச்சுவார்த்தைகளில் சமரசம் செய்ய வெளிநாட்டு சக்திகள் உக்ரைனுக்கு அழுத்தம் தரவில்லை’ என்றார்.

ரஷ்ய மண்ணில் வான் வழி தாக்குதலுக்கு உத்தரவிட்டாரா என்பதை கூற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துவிட்டார். மரியு போல் நகரில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இன்று 38-வது நாளை எட்டியுள்ளது. தலைநகர் கிவ், புறநகர் கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்ய படையின் தாக்குதல் நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here