கார் பின்னோக்கி நகர்வதை தடுக்க முயன்ற சிறுமி; உடல் நசுங்கி உயிரிழந்தார்

பாலிங், ஏப்ரல் 24 :

இங்குள்ள தவார் முக்கிமில் உள்ள கம்போங் கெலேடாங் லுவாரில். நேற்று நண்பகல் நடந்த இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், கார் பின்னோக்கி நகர்வதைத் தடுக்க முயன்ற ஒன்பது வயது சிறுமி, காரில் சிக்கியதால் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று நண்பகல் 2.15 மணியளவில் நடந்த சம்பவத்தில், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரினுள், சிறுமி தனது ஏழு வயது சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஹேண்ட்பிரேக்கைக் இழுத்ததால் கார் பின்னோக்கி நகர்ந்ததாக நம்பப்படுகிறது என்று பேலிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷம்சுதீன் மமட் தெரிவித்தார்.

இதனால் “பீதியடைந்த சிறுமி காரிலிருந்து இறங்கி பின்பக்கமாக ஓடி, அதை நகரவிடாமல் தடுக்க முயன்றார், ஆனால் காரை தடுக்க முடியாமல் அவர் காருக்கடியில் சிக்கிக்கொண்டார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, இந்த விபத்து நடந்தபோது , சிறுமியின் 29 வயதான மாமா ஒரு தனியார் நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை செய்வதற்காக வீட்டில் இருந்து வெளியே செல்லத் தயாராகிக்கொண்டிருந்தார்.

அப்போது “அவரது மருமகளின் அலறலைக் கேட்ட அவர், விரைந்து வந்து சிறுமியைக் கண்டுபிடித்து மீட்டார், ஆனால் சிறுமி மயக்கத்தில் இருந்தார் ,” என்று அவர் கூறினார்.

பின்னர் சிறுமியின் மாமா அவளை சுங்கைப்பேட்டை சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதாகவும் ஷம்சுதீன் கூறினார்.

சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு, குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31 (1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here