மின்சார வசதியின்றி மக்கள் வாழும் நாடு பற்றி தெரியுமா?

வறுத்தெடுக்கும் கோடை வெயிலால் தவிக்கும் மக்களுக்கு திடீர் மின்வெட்டுகள் கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், 21 ஆம் நூற்றாண்டிலும் மக்கள் தொகையில்  அதாவது சுமார் ஒரு நாட்டின் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் மின்சாரமின்றி இருளில் மூழ்கிக் கிடப்பதுதான் வினோதம். ஆம். வடகிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு கோடியே 12 லட்சம் பேர் வசிக்கக் கூடிய தெற்கு சூடான் நாட்டில்தான் இந்த அவலம்.

அங்கு வெறும் 6.7 சதவீத மக்களுக்கே மின்சார வசதி கிடைத்திருக்கிறது. அந்நாட்டில் 80 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலேயே வசித்து வரும் நிலையில்,அவர்களுக்கு மின்சார வசதி எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால், இந்த நவீன யுகத்திலும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்நாளில் மின்விளக்கையே பார்க்காமல் வாழ்ந்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒருங்கிணைந்த சூடானாக இருந்தபோதே தெற்கு சூடான் பகுதியில் மின் உற்பத்தி திறன் போதிய அளவில் இல்லாமல் இருந்து வந்தது. 2013 முதல் 2020 -ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு போரில் ஏற்கெனவே இருந்த சொற்ப மின் உற்பத்தி கட்டுமானமும் சேதமடைந்ததால் மின் உற்பத்தி வெகுவாக வீழ்ச்சி கண்டது.

தெற்கு சூடானின் ஒட்டுமொத்த மின் தேவையே தமிழகத்தின் நீலகிரி மாவட்ட மின் நிலையங்களில், தற்போதைய மின் உற்பத்தி அளவான 350 மெகாவாட்டை விட குறைவாக அதாவது 300 மெகாவாட்டாக மட்டுமே உள்ளது.

இதனால், தெற்கு சூடானின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேருக்கே மின் நிலையங்கள் மூலம் மின்சார விநியோகம் செய்ய முடிகிறது. 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மின் நிலையங்கள் மூலம் தெற்கு சூடான் நாட்டில் வெறும் 30 ஆயிரம் நுகர்வோர்களே மின் இணைப்பை பெற்றிருந்தனர்.

மின்சார வாரியத்தின் சார்பில் நீர்மின் நிலையங்கள், டீசல் ஜெனரேட்டர்கள், சோலார் பேனல் மூலம் சுமார் 200 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. வசதிபடைத்த மக்கள் சோலார் பேனல் மற்றும் ஜெனரேட்டர்கள் மூலம் தனியாகவே மின்சாரம் உற்பத்தி செய்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here