இந்த பெண் கண்ணீர் விட்டு அழவும் முடியாது, குளிக்கவும் முடியாது – காரணம் என்ன?

நீரின்றி அமையாது உலகு” என்பது திருவள்ளுவரின் வாக்கு. அதே போல, மழை நீர்; உயிர்நீர், நீரின்றி நாம் வாழ முடியாது என்ற பாடங்களை எல்லாம் நாம் பள்ளியில் படித்திருப்போம். தண்ணீர் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை சிறு வயது முதலே நமக்கு கற்று கொடுத்து வந்துள்ளனர்.

ஆனால், திரைப்படம் ஒன்றில், நகைச்சுவை நடிகர் விவேக், எனக்கு தண்ணீரில் கண்டம் என்பார். அதுபோல, தண்ணீரே உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தினால் என்ன செய்ய முடியும்.

ஆம், அமெரிக்காவின் டக்ஸான் பகுதியைச் சேர்ந்த 15 வயது இளம்பெண் அபிகெயில் பெக், அத்தகைய ஒவ்வாமையால் அவதியடைந்து வருகிறார். இவருக்கு மிகவும் அரிதான பிரச்சினை ஒன்று இருக்கிறது.

அதனால், இவர் மீது தண்ணீர் பட்டாலே வலியுடன் கூடிய அரிப்பு ஏற்பட்டு விடும். இவ்வளவு ஏன், கண்ணீர் பட்டால் கூட முகம் சிவந்து விடுமாம். இதனால், அந்தப் பெண் குளிக்கவோ, சோகத்தில் அழவோ முடியாது.

பிறக்கும்போது மற்ற எல்லோரையும் போல சராசரி குழந்தையாகத் தான் இருந்தார் அபிகெயில் பெக். 12 வயது வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டில் 13 வயதில் இருந்து தான் இத்தகைய அரிய பிரச்சினைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கின. அதே சமயம், தண்ணீர் பட்டாலே அலர்ஜி என்ற தீவிரத்தன்மை கடந்த மாதம் தான் உறுதி செய்யப்பட்டது.

ஆசிட் போல இருக்கும்

நமக்கெல்லாம் உடம்பில் ஆசிட் பட்டால் எப்படி எரிச்சல் ஏற்படுமோ, அதுபோல அபிகெயிலுக்கு தண்ணீர் பட்டாலே எரிச்சலும், அரிப்பும் ஏற்படுமாம். இதனால், மிகுந்த சிரமங்களுக்கு இடையே இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டும் குளிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அதுவே, குடிநீர் என வருகிறபோது, கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் தண்ணீர் குடித்ததே இல்லையாம். குடிநீர் அருந்தினால் உடனடியாக வாந்தி வரும் என்கிறார் அபிகெயில்.

குடிநீருக்குப் பதிலாக தினசரி மாதுளம் பழச்சாறு அல்லது தண்ணீர் சத்து குறைவாக உள்ள பிற சத்து பானங்களை இவர் அருந்தி வருகிறார். உடலுக்கு தேவையான தண்ணீர் எடுத்துக் கொள்வதில்லை என்பதால், அதை ஈடு செய்வதற்கு மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில் மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here