நாட்டில் இதுவரை மொத்தம் 65,535 கை, கால் மற்றும் வாய் நோய் வழக்குகள் பதிவு; 3 வழக்குகள் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கோலாலம்பூர், மே 31:

கடந்த மே 28 ஆம் தேதி வரை பதிவான மொத்தம் 65,535 கை, கால் மற்றும் வாய் நோய்களில் (HFMD) இதுவரை மூன்று பேர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

முதல் மற்றும் இரண்டாவது நோயாளிகள் மூளைக்காய்ச்சல் காரணமாக ICU வில் அனுமதிக்கப்பட்டனர் மற்றும் அவர்கள் EV71 நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது, மூன்றாவது பிள்ளை வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண்காணிப்புக்காக ICU இல் அனுமதிக்கப்பட்டது என்றார்.

“மூன்றாவதாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் கடந்த மே 27 அன்று கூடுதல் கண்காணிப்புக்காக வழக்கமான வார்டுக்கு மாற்றப்பட்டது, அதே நேரத்தில் முதல் மற்றும் இரண்டாவது வழக்குகள் இன்னும் ICU இல் தீவிர கண்காணிப்பில் உள்ளன,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 2,333 வழக்குகளுடன் ஒப்பிடுகையில் 27 மடங்கு அதிகமாகும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

இதில் அதிகபட்சமாக சிலாங்கூரில் மொத்தம் 18,525 வழக்குகள் (28.27%) பதிவாகியுள்ளன, அதனைத்தொடர்ந்து கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் 8,088 வழக்குகள் (12.34%), பேராக் 5,810 வழக்குகள் (8.87%), கிளாந்தான் 4,905 வழக்குகள் (7.48%) , மற்றும் சபா 4,077 வழக்குகள் (6.22%) பதிவாகியுள்ளன.

மேலும் கடந்த மே 29ஆம் தேதி வரை, மொத்தம் 1,174 குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் பாலர் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 228 தன்னார்வமாகவும், 946 வளாகங்கள் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1988 இன் கீழ் மூடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மொத்தத்தில், 715 வளாகங்கள் (61%) மாவட்ட சுகாதார அலுவலகத்தின் ஆய்வுகளின் பின், கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் மற்றும் பிற தடுப்பு கட்டுப்பாடுகள் என்பவை அவ்வளாகங்களின் உரிமையாளர்களால் செயல்படுத்தப்பட்டதைக் கண்டறிந்த பின்னர், மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here