மலேசிய விமானப்படையின் 64-ஆவது ஆண்டு விழா அணிவகுப்பில் மாட்சிமை தங்கிய பேரரசர் கலந்து சிறப்பித்தார்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 1 :

மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசி துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர், இன்று விமானப்படை தளத்தில் நடந்த மலேசிய விமானப்படையின் 64-ஆவது ஆண்டு விழா அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

காலை 9 மணியளவில் விமானப்படைத்தளத்திற்கு வந்தடைந்த மாண்புமிகு பேரரசர் தம்பதியினரை, பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் டான் ஸ்ரீ அஃபெண்டி புவாங், விமானப்படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்கர் கான் கோரிமான் கான் மற்றும் அவரது துணை லெப்டினன்ட் ஜெனரல் டத்தோ முகமட் சாலே உஸ்மான் ஆகியோர் வரவேற்றனர்.

மலேசிய தேசியக் கொடி மற்றும் மலேசிய ஆயுதப்படைகளின் கொடிகள் ஏந்திய ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து செல்லும் முன், விமானப்படையின் கூட்டு இசைக்குழுவினரால் தேசிய கீதம் மற்றும் பேர்விரா டி அங்கசா பாடல் இசைக்கப்பட்டது.

லெப்டினன்ட் கர்னல் ஹசான் பஸ்ரி தாஜூல் ஆரிஃபின் தலைமையிலான 23 அதிகாரிகள் மற்றும் 420 உறுப்பினர்கள் கொண்ட அணியின் அணிவகுப்பு மரியாதையை பேரரசர் ஏற்றுக்கொண்டார்.

விமானப்படையின் 64 வது ஆண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருளான ‘Kuasa Udara, Perisai Kedaulatan Negara’ என்ற தலைப்பில் பேரரசர் தனது சிறப்புரையை வழங்கினார்.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் நீடித்த இந்த விழா, முன்னாள் விமானப்படை தளபதிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள், தூதரக பிரதிநிதிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் உட்பட 2,000 விருந்தினர்கள் கலந்துகொண்ட ஒரு அரச விருந்துடன் இனிதே முடிவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here