பூலாவ் இண்டா அருகேயுள்ள கடலில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் கண்டெடுப்பு

கிள்ளான், ஜூன் 3 :

இங்குள்ள பூலாவ் இண்டாவிலுள்ள மெரினா படகுத்துறைக்கு அருகே, கடற்கரையில் மிதந்த இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று (ஜூன் 2) மாலை 4.26 மணிக்கு, இச்சம்பவம் குறித்து அப்பகுதி மீனவர்கள் மூலம் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக மலேசிய கடல்சார் அமலாக்க முகமைத்துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் வி. சிவகுமார் தெரிவித்தார்.

“உடனே அப்பகுதிக்கு விரைந்த அவரது துறையினரின் படகு, மாலை 4.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு உடல்களையும் கண்டெடுத்தது,” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இறந்தவர்களில் ஒருவர் முழு உடையில் இருந்ததாகவும், மற்றவர் நீண்ட பேன்ட் மட்டுமே அணிந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

“அந்த உடல்கள் சுமார் மூன்று நாட்கள் தண்ணீரில் இருந்ததாக நாங்கள் நம்புகிறோம், அத்தோடு அவ் ஆடவர்கள் பற்றி எந்த அடையாள ஆவணங்களும் கிடைக்கவில்லை ” என்று அவர் கூறினார்,

உடல்கள் மெரினா படகுத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.

காணாமல் போன குடும்ப உறுப்பினர்கள் அல்லது இது தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் மற்றும் கடலில் நடக்கும் வேறு ஏதேனும் குற்றச்செயல்கள் அல்லது அவசரநிலைகள் இருந்தால், சிலாங்கூர் MMEA-ஐ 03-2176 0627 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here