கோலாலம்பூர், ஜூன் 7 :
கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பிளாட் ஸ்ரீ சபாவில், தீவிரமாக கார் திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
46 வயதான அந்த நபர், செராஸ் மாவட்ட காவல்துறை தலைமையக உறுப்பினர்களால் நேற்று மாலை 3 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முஹமட் இட்ஸாம் ஜாபார் தெரிவித்தார்.
இந்தச் சோதனையில் ஒரு புரோத்தோன் வீரா கார், நான்கு புரோத்தோன் ஈஸ்வரா, இரண்டு புரோத்தோன் சாகா மற்றும் ஒரு வேன் ஆகியவை உள்ளடங்கலாக 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேக நபர் தொடக்கத்தில் தனது சொந்த உபயோகத்திற்காக வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பழைய காரை இலக்கு வைத்து திருடியதாகவும், பின்னர் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்பனைக்கு எடுத்துச் சென்றதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
“மேலும் விசாரணையில், சந்தேக நபரிடம் வாகனத் திருட்டு தொடர்பான ஏழு முந்தைய பதிவுகளும், பேராக், பிரிக்ஃபீல்ட்ஸ் மற்றும் தெலுக் இந்தான் மாவட்டங்களில் கார்களைத் திருடியது தவிர, ஆறு போதைப்பொருள் பதிவுகளும் இருப்பது கண்டறியப்பட்டது,” என்று அவர் இன்று செராஸ் காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சிறுநீர் பரிசோதனையில், சந்தேக நபர் சியாபு வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், குற்றவியல் சட்டத்தின் 379 (ஏ) பிரிவின் கீழ் சந்தேக நபர் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.