தைப்பிங், ஜூன் 7 :
மோசடி வழக்கில் ‘குற்றம் சாட்டப்பட்டு’ சிறையில் அடைக்கப்படுவோம் என்ற அச்சத்தில், மக்காவ் மோசடி கும்பல் மூலம் ஏமாற்றப்பட்டதன் விளைவாக, மூதாட்டி ஒருவர் RM670,000 இழந்தார்.
தைப்பிங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் உஸ்மான் மம்மத் கூறுகையில், 77 வயதான அந்தப் பெண்மணிக்கு, மே 15 ஆம் தேதி வாட்ஸ்அப் அப்ளிகேஷன் மூலம் போலீஸ் அதிகாரி போல் மாறுவேடமிட்ட ஒரு ஆணிடம் இருந்து அழைப்பு வந்தது.
அவரது கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட நபரை ஆஹ் செங் என்ற பெயரைப் பயன்படுத்திய ஒரு நபர் தொடர்பு கொண்டார், தன்னை சபாவைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திய அவர், பாதிக்கப்பட்டவரின் அடையாள அட்டை ஒரு மோசடி வழக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார்.
அதன்காரணமாக மூதாட்டி சிறையில் அடைக்கப்படுவார் என்றும் சந்தேக நபர் கூறினார்.
எனவே “சந்தேக நபர் அந்த வழக்கைத் தீர்க்க முன்வந்தார், ஆனால் அதனைச் செய்ய தனக்கு RM600,000 முதல் RM700,000 வரை செலுத்துமாறு கூறினார்.
“மூதாட்டி தான் சிறையில் அடைக்கப்படுவார் என்று மிகவும் பயந்ததால், சந்தேக நபரின் கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டார். மேலும் மூதாட்டி தொடர்பான வழக்கை போலீசார் தீர்ப்பார்கள், ”என்று அவர் கூறியதாகவும், இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
உஸ்மானின் கூற்றுப்படி, அந்த மூதாட்டி மே 23 அன்று ஒரு வங்கியில் RM320,000 மற்றும் RM350,000 மதிப்புள்ள இரண்டு காசோலைகளை டெபாசிட் செய்தார்.
பரிவர்த்தனையின் போது எந்தவிதமான சர்ச்சைகளும் ஏற்படாத வகையில், வீடு ஒன்றை வாங்க பணம் பயன்படுத்தப்பட்டதாக வங்கிக்கு தெரிவிக்குமாறு சந்தேக நபர் பாதிக்கப்பட்டவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
அதன் பின்னரே தான் “ஏமாற்றப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட மூதாட்டி, காவல்துறையில் நேற்று புகாரளித்தார்,” என்று அவர் கூறினார்.