சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்த இரு நண்பர்கள் மீது கார் மோதியதில், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்

டுங்குன், ஜூன் 17 :

கெத்தெங்கா ஜெயா என்ற இடத்திலுள்ள ஜாலான் பக்கா-பண்டார் அல் முக்தாபி பில்லா ஷா சாலையின் 18.5 ஆவது கிலோமீட்டரில், நேற்று சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்த இரு நண்பர்கள் மீது கார் மோதியதில், அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கமாரிதுவான் முகமட் (41) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது நண்பர் 48 வயதான ரோஸ்டி யாக்கோப், அவரது உடல் மற்றும் தலையின் பல பாகங்களில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, கெத்தெங்கா ஜெயா ஹெல்த் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

டுங்குன் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் பஹாருதீன் அப்துல்லா கூறுகையில், இந்தச் சம்பவத்தின் போது, ​​காய்கறி வியாபாரியான கமாரிதுவான், காய்கறிக்காக காத்துக்கொண்டிருந்தவேளை அருகில் உள்ள ஹார்டுவேர் கடையில் பணிபுரிபவரான ரோஸ்டியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“24 வயதான TDM தோட்ட அதிகாரி ஒருவர், கெமாமானில் இருந்து பாக்கா நோக்கி ஓட்டிச் சென்ற புரோத்தோன் சாகா கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்கம் சறுக்கி, அங்கிருந்த ஒரு பெட்டிக் கடையில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ​​“கடையின் அருகில் பேசிக்கொண்டிருந்த இரு நண்பர்களையும் மோதியதில், அவர்கள் சுமார் 20 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர்.

லாடாங் பினாங் மாஸைச் சேர்ந்த புரோத்தோன் சாகாவின் ஓட்டுநர் சிறு காயங்களுக்கு உள்ளானதாக பஹாருடின் கூறினார்.

“பாதிக்கப்பட்ட இருவரின் உடல்களும் மேல் நடவடிக்கைக்காக டுங்குன் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டன,” என்று அவர் கூறினார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here