மலேசியாவில் அதிகமாக நடக்கும் மோசடிச் சம்பவங்கள்

பகுதி 1

வாரந்தோறும் மோசடிக் கும்பலால் மக்கள் ஏமாற்றப்படுவது குறித்த செய்திகளை நாம் ஊடகங்களில் காண முடிகின்றது. இந்தச் செய்திகள் அனைத்தும் நமக்குப் பயத்தை ஏற்படுத்தினாலும் பாதுகாப்பாக இருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.

மலேசிய மக்களுள் பெரும்பாலோர் வங்கி, முதலீடு, அரசு இலாகாக்களுடனான விவகாரங்களுக்கு ஆன்லைன் சேவையைப் பயன்படுத்துகின்றனர். இதன்வழி மோசடிக் கும்பல்கள் குறிப்பிட்ட நபர்களை அடையாளங்கண்டு அவர்களிடம் பல யுக்திகளைப் பயன்படுத்தி ஏமாற்றிவிட்டு காணாமல் போய்விடுகின்றனர்.

நாட்டில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய இந்த இணையதள மோசடிக் கும்பல்கள் பல உள்ளன. அவை பின்வருமாறு:

1. இபிஎப் சேமநிதி மோசடி

– நாம் சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் செய்திகளில் இபிஎப் சேமநிதி தொகையை மீட்கலாம் என்ற உறுதிப்படுத்தப் படாத தகவலைக் கண்டால் அதில் குறிப்பிட்டிருக்கும் நபர்களைத் தொடர்புகொள்ளாமல் இருப்பதே பாதுகாப்பானது.

காரணம் இபிஎப் நிதியை வழக்கத்தைக் காட்டிலும் விரைவாக மீட்டுதருவதாகவும் அதற்கு மாறாகக் குறிப்பிட்ட தொகை கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் ஒருசில கும்பல்கள் மோசடி செய்து வருகின்றன. அவர்கள் தங்கள் மோசடியை விளம்பரப்படுத்தும் தளமாக ஃபேஸ்புக், இன்ஸ்டா கிராம் போன்ற சமூக வலைத்தளப் பக்கங்களைப் பயன் படுத்துகின்றனர்.

இபிஎப் நிதியை மீட்பதற்குக் குறிப்பிட்ட நபர்களிடம் இந்த மோசடிக் கும்பல் அவர்களின் அடையாள ஆவணங்களைக் கேட்பர். அதன்பின்னர் அதைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும்படி கூறுவர். இதனை நம்பி சிலர் பணத்தைச் செலுத்தி ஏமாந்துள்ளனர்.

இது தொடர்பில் தமது தரப்பு எந்தவோர் இடைத்தரகரையும் நியமிக்கவில்லை என்றும் இது முழுக்க முழுக்க மோசடிச் செயல் என்றும் இபிஎப் தரப்பு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் 24 மணி நேரத்திற்குள் இபிஎப் கணக்குகள் முடக்கப்படும் என சந்தாதாரர்களுக்கு வரும் போலி குறுஞ்செய்தியையும் இபிஎப் தரப்பு அடையாளம் கண்டுள்ளது.

இந்தப் போலி குறுஞ் செய்தியை நம்பி ஒருசிலர் தங்கள் வங்கிக்கணக்கு எண்ணை வழங்கி அதில் இருந்த பணத்தை இழந்துள்ளனர்.

2. சட்டவிரோத வட்டி முதலைகள்

பொதுவாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கங்களில் குறைந்த வட்டி விகிதத்திலும் எளிய வழிமுறையிலும் கடன்கள் வழங்குவதாகக் கூறி விளம்பரங்கள் வருவதை நாம் பார்த்திருப்போம்.

அந்த விளம்பரத்திற்கான இணைப்பு பக்கத்திற்குள் சென்று பார்க்கும்போது கடன் பெற்றுள்ள சிலரின் புகைப்படங்கள் அதில் இணைக்கப்பட்டிருக்கும். இது நமக்குக் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடும்.

எனவே நம்மில் சிலர் அந்தத் தரப்பிடம் கடன் பெற விண்ணப்பம் செய்ய முனைவோம். ஆனால் இம்மாதிரியான கடன் வழங்கும் தரப்பினருள் பெரும்பாலானோர் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களாவர். அவர்களிடம் முறையான அங்கீகாரம் – உரிமம் இருக்காது.

மேலும் கடன் பெறுவதற்கான சுயதகவலை வழங்கிய பின்னர் அவர்கள் முன்பணம் செலுத்தக் கோரி கேட்பர். கடன் தொகை உறுதியாகக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஒருசிலர் அவர்கள் குறிப்பிடும் தொகையை வழங்குவர். ஆனால் தொகை பெறப்பட்டதும் அந்தக் கும்பல் மாயமாகிவிடும்.

இது தொடர்பில் போலீசுக்குப் பல புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

3. முதலீடு சம்பந்தப்பட்ட மோசடி

குறைந்த தொகையில் முதலீடு செய்து பெரும் தொகையை லாபகரமாகப் பெறலாம் என இன்றளவும் போலி முதலீட்டு விளம்பரங்கள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. இவை அனைத்தும் அங்கீகரிக்கப்படாத நிலையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி விளம்பரப்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு 100 ரிங்கிட் செலுத்தி 10 ஆயிரம் ரிங்கிட் வரை லாபத்தை ஒரே மாதத்திற்குள் பெறலாம் எனவும் அவர்கள் போலியாக விளம்பரம் செய்கின்றனர். குறிப்பாக இளையோர், பணி ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள் போன்ற தரப்பினரைக் குறிவைத்து இக்கும்பல் செயல்படுகிறது எனத் தெரியவந்துள்ளது.

முதலில் குறைந்த தொகையில் பணம் செலுத்தக் கோரி அவர்களிடம் இந்த மோசடிக் கும்பல் சுயவிவரங்களைப் பெற்றுக்கொள்ளும். பின்னர் ஓரிரு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு தொகையைச் செலுத்தக் கோரி வலியுறுத்தும். எந்தளவுக்குத் தொகையைச் செலுத்துகின்றோமோ அதற்கேற்றாற்போல் லாபமும் அதிகரிக்கும் என்று ஆசைவார்த்தைகளை அவர்கள் கூறுவார்கள். இதனை நம்பி சிலர் அவர்கள் கேட்க கேட்கப் பணத்தை வழங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அந்தக் கும்பல் மாயமாகிவிடும். அவர்கள் முன்னதாகப் பேசிய தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டால் அது பயனீட்டில் இருக்காது.

-தொடரும்

மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் இதுபோன்ற இணையதள மோசடிகள் குறித்து அவ்வப்போது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பில் பல பாதுகாப்பு – விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. உறுதிப்படுத்தப்படாத தரப்பினரின் கேள்விகளுக்குச் சமூக வலைத்தளங்களில் பதில் அளிக்காதீர். உங்களின் சுயவிவரங்களை எளிதாக யாரை நம்பியும் வழங்கிவிட வேண்டாம் என ஆணையம் தொடர்ந்து வலியுறுத்துகின்றது. குறிப்பாக இந்த மோசடிக் கும்பல்களால் தொந்தரவு ஏற்பட்டால் போலீசில் புகார் செய்யவும் அல்லது aduanskmm@mcmc.gov.my என்ற அகப்பக்கம் https://aduan.skmm.gov.my என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் 016-2206262 என்ற வாட்ஸ்அப் எண்கள் வாயிலாகவும் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடம் புகார் அளிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here