செலாட் தெப்ராவ் வழியாக எண்மர் ஜோகூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததை அடுத்து, அப்பகுதியில் போலீசாரால் முள்வேலி அமைப்பு

ஜோகூர் பாரு, ஜூன் 17 :

செலாட் தெப்ராவ் வழியாக ஜோகூருக்குள் சட்டவிரோதமாக எண்மர் நுழைந்தது தொடர்பான சிசிடிவி காணொளியை அடுத்து, செலாட் தெப்ராவ் கரையில் உள்ள வேலிக்கு அருகே போலீசார் முட்கம்பி வேலிகளை அமைத்துள்ளனர்.

வெள்ளியன்று (ஜூன் 17) அதிகாலை 1.12 மணியளவில் பாங்குனான் இஸ்கந்தர் சுங்கம், குடிவரவு மற்றும் தனிமைப்படுத்தல் (CIQ) பணியில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கு சட்டவிரோதமாக 8 பேர் நுழைந்தது பற்றிய தகவல் கிடைத்தது என்று ஜோகூர் பாரு தெற்கு OCPD துணை ஆணையர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் இருந்து மேலும் விசாரணை நடத்தியதில், ஐந்து ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அவ்வழியூடாக சட்டவிரோதமாக நுழைந்தது தெரியவந்தது.

“இந்த வழக்கு குடிவரவு சட்டத்தின் 6(3) பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளில் ஒன்றான முள்வேலி அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி கூறினார்.

மேலும் அப்பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடும் நோக்கில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

அத்தோடு “சட்டவிரோத பாதையில் மலேசியாவுக்குள் நுழைந்த அந்த நபர்களை போலீசார் இப்போது கண்காணித்து வருகின்றனர்” என்று அவர் தனது முகநூலில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

“இந்த விவகாரங்கள் நாடு மற்றும் ஜோகூரின் நற்பெயரை பாதிக்கும் என்பதால், அமைச்சகம் இந்த விவகாரங்களை இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தின் வீடியோ வியாழக்கிழமை (ஜூன் 16) சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here