பாலிக் பூலாவ்:
தெலுக் பஹாங்கில் உள்ள பினாங்கு தேசிய பூங்காவின் வனப்பகுதியில் காணாமல்போன போன பிரெஞ்சுக்காரர் 8 மணி நேர தேடலின் பின் இன்று அதிகாலை பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
நேற்று மாலை 6.07 மணிக்கு யூன்ஸ் ஓகாலி (37) என்பவரிடமிருந்து தமது துறைக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், அவர் தொலைந்து போயுள்ளதாகவும் தெரிவித்ததாக, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரைத் தேடி, மீட்கும் பணிகளை தமது துறையுனர் தொடங்கியதாக அவர் சொன்னார்.
“பாதிக்கப்பட்டவரை கைத்தொலைபேசியில் தொடர்புகொள்ள முடிந்ததன் மூலம், தேடல், மீட்பு பணி எளிதாகியது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
இன்று அதிகாலை 1.22 மணியளவில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குறித்த நபர் மீட்கப்பட்டதாகவும், பின்னர் மேலதிக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.








