தாமான் ஸ்ரீ மாஞ்சாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கியதற்காக ஆடவர் கைது

கோலாலம்பூர், ஜூன் 22 :

கடந்த திங்கட்கிழமை, தாமான் ஸ்ரீ மாஞ்சாவில், மோட்டார் சைக்கிள் குற்றத்தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரு போலீஸ்காரர்கள், வழிப்போக்கர் ஒருவரை சோதனை செய்ய விரும்பியபோது, அவர் போலீஸ்காரர்களை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார்.

இந்த தாக்குதலின் காரணமாக, இரு போலீஸ்காரர்களது கைகளிலும் உடலிலும் காயம் ஏற்பட்டதாகவும், சண்டையின் விளைவாக 26 வயது சந்தேக நபர் லேசான காயம் அடைந்ததாகவும் பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

“நேற்று மாலை 6.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், குடியிருப்புப் பகுதியில் வாகனத்தில் சந்தேகப்படும்படியான ஒரு நபர் இருப்பதாக கூறி உள்ளூர் நபரிடமிருந்து புகார் கிடைத்தது.

“புகாரின் பேரில், அங்கு சென்ற போலீஸ்காரர்கள் சந்தேக நபரை உடல் பரிசோதனைக்காக வாகனத்தில் இருந்து இறங்கும்படி உத்தரவிட்டனர். சந்தேக நபர் திடீரென ஒரு போலீஸ் உறுப்பினரின் கழுத்தை பின்னால் இருந்து பிடித்து, பின்னர் உறுப்பினரின் முகம் மற்றும் வயிற்றில் குத்தினார்.

“சந்தேக நபரை தடுக்க முயன்ற மற்றைய போலீஸ்காரரையும் அவர் முகத்தில் குத்தினார். மேலும் சந்தேக நபர் ஆக்ரோஷமாக செயல்பட்டார் என்றும் அவரை கைது செய்யப்பட்டபோது கைகலப்பு ஏற்பட்டது, ”என்றும் அவர் கூறினார்.

ஆரம்ப கட்ட சோதனையில், சந்தேக நபருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்பதும், சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பதும் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் 353வது பிரிவின்படி விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேகநபர் இந்த வெள்ளிக்கிழமை வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் ஃபக்ருதீன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here