கோலாலம்பூர், ஜூலை 1 :
பாதுகாப்பு அமைச்சகத்திடம் (Mindef) ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, RM22.5 மில்லியன் மதிப்புள்ள போலி வங்கி உத்தரவாதங்களை தயாரித்து மோசடி செய்ததாக, ஒரு பயண முகவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இன்று காலை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி கமாருதீன் கம்சான் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட சுலைமான் அப்துல் ரசாக் தான் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார்.
338 வீட்டுப் பிரிவுகளை நிர்மாணிப்பதற்கும், முடிப்பதற்கும் மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான பத்து 10 கேம்ப், குவாந்தான், பகாங்கின பிற வேலைத்திட்டத்திற்காகவும் தேவையான பத்திரங்களுக்கு பதிலாக போலியான வங்கி உத்தரவாதங்களைத் தயாரித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர், 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 20 மற்றும் நவம்பர் 11 ஆம் தேதிகளில் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்பட்டது.
அவர் நேற்று (ஜூன் 30) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். இவ் இரண்டு குற்றச்சாட்டுகளுக்காகவும் அவர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 471 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி கமாருடின் கம்சான் முதலில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு RM500,000 ஜாமீன் வழங்க உத்தரவிட்டார், ஆனால் குற்றஞ்சாட்டப்படடவர் தரப்பு வழக்கறிஞர் ஆதி சுல்கர்னைன் சுல்காஃப்லி குறைந்த ஜாமீன் கோரியதை அடுத்து, அத்தொகையை RM80,000 ஆகக் குறைத்தார்.
அரசு துணை வழக்கறிஞர் சுலைக்கா முகமட் அபாண்டி இந்த வழக்கை தொடர்ந்தார்.
மேலும், இந்த வழக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.