போலீஸ் சோதனைச் சாவடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டவர் கைது

கோலாலம்பூர், ஜூலை 9 :

போலீஸ் சோதனைச் சாவடியில் இருந்து தப்பிச் செல்ல வெளிநாட்டவர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி, அவர் கைது செய்யப்பட்டதால் தோல்வியடைந்தது.

இன்று அதிகாலை Terminal Bersepadu Selatan (TBS) பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார் என்று செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் இட்ஸாம் ஜாஃபர் தெரிவித்தார்.

TBS இன் C நுழைவாயிலுக்கு முன்னால் சந்தேகத்திற்கிடமான நிலையில் 35 வயதுடைய வெளிநாட்டவர் ஒருவரை போலீசார் கண்டறிந்ததை அடுத்து, அதிகாலை 5.45 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக அவர் கூறினார்.

“காவல்துறையினர் சந்தேக நபரை அணுகி, அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறினர். எனினும், சந்தேக நபர் ஒத்துழைக்காததால், சோதனையின் போது கைகலப்பு ஏற்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் கடமைகளை செய்யவிடாமல் தடுத்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, TBS போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்,

“TBS காவல்நிலையத்தில் இருந்தபோது, ​​சந்தேக நபர் மீண்டும் ஒருமுறை தப்பிச் செல்ல முயன்றதால், போலீசாருக்கும் சந்தேக நபருக்கும் இடையே மறுபடியும் கைகலப்பு ஏற்பட்டது.

பின்னர் நிலைமை முழுக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 186 மற்றும் குடிவரவுச் சட்டம் 1959/63 (திருத்தம் 2002) பிரிவு 6 (1) (c) ஆகியவற்றின் படி வழக்கு விசாரிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இது தொடர்பில் ஊகங்கள் அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் கருத்துக்கள் எதுவும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

“மாவட்டத்தில் குற்றச் செயல்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் செராஸ் காவல் துறையின் தொடர்பு எண் 03-92845050/5051 என்ற எண்ணிலும், கோலாலம்பூர் காவல் துறையின் ஹாட்லைன் 03-21159999 என்ற எண்ணிலும் அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திலும் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here