கூலிம், ஜூலை 16 :
சாலைப் போக்குவரத்துத் துறை அலுவலகம் அருகே உள்ள உணவகம் முன்பு துரத்திச் சென்றபோது, வாகனத்தை நிறுத்த மறுத்த நான்கு சக்கர வாகன ஓட்டி மோதியதில் போலீஸ்காரருக்கு மண்டை உடைந்ததுடன் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட, ஹாய் டெக் காவல் நிலையத்தில் பணியில் இருந்த கார்ப்ரல் முகமட் கைருல் சயாபிக் அகமட், 31, இன்னும் சுயநினைவின்றி இருக்கிறார், மேலும் மூளையில் கடுமையான இரத்தக்கசிவு காரணமாக கூலிம் மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் உயிருக்குப் போராடி வருகிறார்.
காலை 9.20 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவைச் சேர்ந்த (URB) பாதிக்கப்பட்ட நபரும் நண்பரும், ஒரு நபர் ஓட்டிச் சென்ற நிசான் ஃபிரான்டியர் காரைத் துரத்திக் கொண்டிருந்தனர்.
கூலிம் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ரெட்சுவான் சலே கூறுகையில், சம்பவத்தின் சாட்சியாக இருந்த ஒருவர், கூலிம் பாலிடெக்னிக்கிலிருந்து ஜாலான் சுங்கை உலர் நோக்கி நான்கு சக்கர வாகனத்தை இரண்டு URB மோட்டார் சைக்கிள்கள் துரத்திச் செல்வதைக் கண்டதாகக் கூறினார்.
“அவர்கள் அக்காரை நிறுத்துமாறு கூறினார்கள், இருப்பினும், சந்தேக நபர் திடீரென போலீசாரை மோதினார், பாதிக்கப்பட்டவர் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழும் வரை மோதினார்” என அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்தேக நபர் தனது வாகனத்தை பல வாகனங்களுடன் மோதும் வரை பயணம் முழுவதிலும் அபாயகரமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டிச் சென்றதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இறுதியாக சந்தேக நபரை கூலிம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போலீஸ் குழு செபெராங் பிறை தெங்கா காவல்துறை தலைமையக உறுப்பினர்களிடமிருந்து உதவியுடன் கைது செய்தது.
“கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடையவர் என்றும், சுங்கை பட்டாணியைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு ஏற்கனவே மூன்று குற்றப் பதிவுகள் இருப்பதும் சோதனையில் கண்டறியப்பட்டது.
“சிறுநீர் பரிசோதனையில் சந்தேக நபர் போதைப்பொருளுக்கு சாதகமாக இருப்பதைக் கண்டறிந்ததுடன் அவரது வாகனத்தை பரிசோதித்ததில் பின்புறத்தில் எண்ணெய் தொட்டி மாற்றியமைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது” என்று அவர் கூறினார், சந்தேக நபர் எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதற்கான வாய்ப்பை தாம் நிராகரிக்கவில்லை என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், குற்றவியல் சட்டம் பிரிவு 307/186 மற்றும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 பிரிவு 15 (1) (a) இன் படி வழக்கு விசாரிக்கப்படுகிறது.
இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 42 (1) மற்றும் பிரிவு 44 ஆகியவற்றின் கீழ் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான வாகனம் ஓட்டியதற்காகவும் கடுமையான காயம் ஏற்படுத்தியதற்காகவும் விசாரிக்கப்படுகிறது.
மேலும், “வாகனத்தை மாற்றியமைத்த குற்றத்திற்காக, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 6 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
திருமணமாகி ஒரு குழந்தையை கொண்ட பாதிக்கப்பட்டவர் ஒன்பது ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.