வீடுகளின் பின்னால் சட்டவிரோதமாக இயங்கி வந்த வங்காளதேச நாட்டினரின் கடைகள் – அதிர்ச்சியடைந்த கிள்ளான் மாநகரசபை (MPK)

கிள்ளான், ஜூலை 16 :

நேற்று கிள்ளான் மாநகரசபை (MPK) உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், மேருவைச் சுற்றியுள்ள குடியிருப்புகளுக்குப் பின்னால் உரிமம் இல்லாமல் இயங்கும் வங்காளதேசக் கடைகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன.

இரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனையில், மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில், மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக வணிக உரிமம் இல்லாமல் இயங்கிய மளிகைக் கடையாக புதுப்பிக்கப்பட்ட வளாகத்தில், சட்டவிரோத மது விற்பனை மேற்கொள்வதும் கண்டறியப்பட்டது.

MPK அமலாக்கத்துறை துணை இயக்குநர் ஷாருல் ஹஸ்ரி அப்துல் மஜிட் கூறுகையில், ஜாலான் அபாடி, தாமான் டாயா, ஜாலான் செசென்டுக் மற்றும் ஜாலான் டெராடை ஆகிய இடங்களில் உள்ள வெளிநாட்டவர்களின் வணிகங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற பொது தகவல்களின் விளைவாக மூன்று மணி நேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

“இக்கடைகளில் மது, எரிவாயு தோம்புகள், டிஜிட்டல் தராசுகள் மற்றும் சமையலறை பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்தோம். கைப்பற்றப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு RM9,700 என மதிப்பிடப்பட்டுள்ளது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இதே இடத்தில் மூன்றாவது முறையாக சோதனை நடத்தப்பட்டது என்று ஷாருல் ஹஸ்ரி விளக்கினார்.

“குடியிருப்பு வீட்டைப் புதுப்பித்த ஒரு வங்காளதேசியால் இந்த சட்டவிரோத கடை நடத்தப்பட்டது என விசாரணையில் கண்டறியப்பட்டது. கட்டடத் துறை மூலம் நாங்கள் வளாகத்தை இடிக்கும் பணியையும் மேற்கொண்டோம், ”என்று அவர் விளக்கினார்.

MPK தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here