ஜூன் மாத நிலவரப்படி 118 முதலாளிகள் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கவில்லை; மனிதவள அமைச்சர் தகவல்

கோலாலம்பூர், ஜூலை 25 –

குறைந்தபட்ச ஊதிய ஆணை 2022 இந்த ஆண்டு மே 1 முதல் நடைமுறைக்கு வந்ததில் இருந்து, இதுவரை 118 முதலாளிகள் அதை மீறியுள்ளனர் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இன்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அவர்கள் எவரும் இதுவரை குற்றஞ்சாட்டப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“ஜூன் 30 வரை, குறைந்தபட்ச ஊதிய ஆணை தொடர்பாக தமது துறைக்கு 157 புகார்கள் வந்துள்ளன, மேலும் 118 முதலாளிகள் இந்த உத்தரவை கடைபிடிக்கவில்லை என்று விசாரணையின் முடிவுகள் தெரிவிக்கின்றன என்றார்.

“குறைந்தபட்ச ஊதிய ஆணை 2022ஐப் பின்பற்றுமாறு முதலாளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அப்படியும் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி நேரத்தின் போது, பாரிட் பந்தார் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முஜாஹிட் யூசோப் ராவாவிற்கு பதிலளிக்கும்போது இதனை தெரிவித்தார்.

குறைந்தபட்ச ஊதிய உத்தரவு அமலுக்கு வந்ததில் இருந்து, தனது அமைச்சகம் தீபகற்ப மலேசியா முழுவதுமுள்ள தொழிலாளர் துறை மூலம் முதலாளிகளிடம் எதேட்சையாக சோதனைகளை நடத்தி வருவதாக சரவணன் கூறினார்.

ஜூன் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 3,049 வளாகங்கள் சோதனை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இருப்பினும், இந்த உத்தரவை இந்தாண்டு மே மாதம் நடைமுறைப்படுத்தியதால், முதலாளிகள் இந்த உத்தரவை கடைபிடிக்கும் புள்ளிவிவரங்கள் இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்று சரவணன் கூறினார்.

குறைந்தபட்ச ஊதியங்கள் ஆணை 2022 ஏப்ரல் 27 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது, மலேசியாவின் புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை RM1,200 இலிருந்து RM1,500 ஆக நிர்ணயித்தது.

மேலும் இதில் விதிவிலக்காக ஐந்துக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட முதலாளிகளுக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து குறைந்தபட்சம் RM1,500 செலுத்தத் தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here