புக்கிட் பன்யான் கட்டுமான தளத்தில் பாதுகாவலரை வெட்டிய சம்பவம் தொடர்பாக இருவர் கைது..!

சுங்கை பட்டாணி, ஆகஸ்ட் 5 :

இங்குள்ள புக்கிட் பன்யானில் கட்டுமான தளத்தில் பாதுகாவலரை வெட்டிய சம்பவம் தொடர்பாக இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று வியாழன் (ஆகஸ்ட் 4) மாலை சுமார் 4.15 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கோல முடா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஜைதி சே ஹாசன் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், 58 வயதான பாதிக்கப்பட்ட நபர், கட்டுமான தளத்தில் பணியில் இருந்தபோது, அவ்விடத்தில் மோட்டார் சைக்கிள்களை ஆபத்தான முறையில் ஓட்டியதற்காக தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரைத் திட்டியதால், அடையாளம் தெரியாத மூவர் அவரை கத்தியால் வெட்டியதாக கூறினார்” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

புகாரின் பேரில் 41 மற்றும் 35 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஏசிபி ஜைதி தெரிவித்தார்.

“அவர்களில் ஒருவருக்கு முந்தைய குற்றவியல் மற்றும் போதைப்பொருள் பதிவுகள் உள்ளன, மற்றொருவருக்கு முன்னைய குற்றப் பதிவு எதுவும் இல்லை,” என்று அவர் கூறினார்.

சந்தேகநபர்கள் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இத்தாக்குதலில், பாதிக்கப்பட்டவரின் தலை மற்றும் இடது கைகளில் காயம் ஏற்பட்டு தற்போது சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தலைமறைவாக உள்ள மற்றொரு சந்தேக நபரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326 இன் கீழ் இவ் வழக்கு விசாரிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here