ஆகஸ்ட் நடுப்பகுதியில் 23,000 இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்கள் மலேசியாவிற்குள் அழைத்து வரப்படுவர்

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 6 :

இந்தோனேசியாவில் இருந்து தருவிக்கப்படும் வீட்டுப் பணிப்பெண்களுக்கான நீண்ட காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

மலேசியாவுக்கான இந்தோனேசிய தூதர் ஹெர்மோனோ கூறுகையில், சுமார் 23,000 இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்கள் (PDI) விண்ணப்பங்கள் செயலாக்கப்பட்டு, மலேசிய முதலாளிகளுடன் சேர்ப்பிப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவித்ததை அடுத்து, ஆகஸ்ட் நடுப்பகுதியில் தொடங்கி, தொழிலாளர்கள் கட்டம் கட்டமாக மலேசியாவிற்கு வருவார்கள் என்றார்.

இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்கள் மலேசியாவிற்குள் அழைத்து வரும் “One Channel System (OCS) மூலம் முன்னோடித் திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் நடுப்பகுதியில் தொடங்கும் என்றும் நாங்கள் ஏற்கனவே தூதரகத்தின் தளத்தைப் பயன்படுத்தி கோரிக்கைகளை கைமுறையாக செயல்படுத்தியுள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.

ஜூலை 28 அன்று, மனிதவள அமைச்சர் எம். சரவணன் மற்றும் இந்தோனேசிய மனிதவள அமைச்சர் ஐடா ஃபவுசியா ஆகியோர் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில், மலேசியாவின் குடிவநுழைவுத் துறை மற்றும் இந்தோனேசிய தூதரகத்தால் இயக்கப்படும் ஆன்லைன் அமைப்புகளுக்கு இடையே ஒரு கூட்டு தொழில்நுட்பக் குழு இந்த அமைப்புகளை ஒருங்கிணைக்கும் என்று குறிப்பிட்டிருந்தது.

தற்போது, ​​இந்த அமைப்பு இன்னும் செயல்படவில்லை, OCS-ஐ உருவாக்கிய அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு நிறைவடைந்தவுடன், தேவையை பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை விரைவாகச் செயல்படுத்த முடியும் என்று தான் நம்புவதாக ஹெர்மோனோ கூறினார்.

மேலும், கடந்த திங்கட்கிழமை நாட்டிற்கு வந்த எட்டு பிரஜைகளின் முதல் தொகுதி மலேசியா மற்றும் இந்தோனேசியாவினால் கையெழுத்திடப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்கள் என்றார்.

இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏப்ரல் 1ஆம் தேதி கையெழுத்தானது.

MOU மூலம், PDI ஆனது ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதிக்குள் குறைந்தபட்ச ஊதியமாக RM1,500 ஐப் பெற முடியும், அவர்களின் வேலை நோக்கத்தின்படி மட்டுமே வேலை செய்ய முடியும் மற்றும் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறையை அனுபவிக்க முடியும்.

சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படாவிட்டால், இழப்பீடாக செலுத்தப்படாத மொத்த ஊதியத்தில் 5% கூடுதலாக ஊதிய உத்தரவாதங்களை அது கோடிட்டுக் காட்டியது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் ஊதியம் வழங்கத் தவறினால், வீட்டுப் பணியாளர்கள் தங்கள் வேலை ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும் உரிமையைப் பெறுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here