கோலாலம்பூர், செப்டம்பர் 10 :
கடந்த செவ்வாய்கிழமை கிள்ளானின் பாண்டமாறனில் போலீசார் மேற்கொண்ட “Op Kontraban” நடவடிக்கை மூலம் மானிய விலை டீசல் கடத்தல் கும்பலை போலீசார் முறியடித்தனர், இதில் RM7.5 மில்லியன் மதிப்புள்ள டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.
ரோயல் மலேசியன் காவல்துறையின் (PDRM) கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர், துணை ஆணையர் ஸ்கந்தகுரு ஆனந்தன் கூறுகையில், இந்த நடவடிக்கையை புக்கிட் அமான் சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவு, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை (KDNKA) மேற்கொண்டதாக தெரிவித்தார்.
இந்த சோதனையில், 70,000 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டதோடு, மூன்று உள்ளூர் ஆண்களும் ஒரு வெளிநாட்டவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்களிடமிருந்து சரக்கு வாகனங்கள், டேங்கர்கள், கார்கள் மற்றும் பல்வேறு எண்ணெய் பரிமாற்ற உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
“பிடிக்கப்பட்ட டேங்கரும் மாற்றியமைக்கப்பட்டது கண்டறியப்பட்டது மற்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட டீசல் மதிப்பு RM7.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
சமூகத்தின் நெருங்கிய ஒத்துழைப்புடன் மானியப் பொருள் கடத்தலை ஒழிக்க காவல்துறை எப்போதும் உறுதியளிக்கும் என்றார் அவர்.
விநியோக கட்டுப்பாட்டுச் சட்டம் 1961ன் பிரிவு 21ன் படி தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் விசாரிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.