படகு மூழ்கியதில் காணாமல் போன உள்ளூர் மீனவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார்

லுமூட், செப்டம்பர் 18 :

பாகான் லிபாஸ் கடலில் நேற்று படகு மூழ்கியதில் காணாமல் போன உள்ளூர் மீனவர், இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 18) காலை 11.30 மணியளவில் நீரில் மூழ்கி இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

பேராக் மலேசிய கடல்சார் அமலாக்க துறை இயக்குநர் முகமட் ஹம்பலி யாக்கூப் கூறுகையில், பாகான் லிபாஸ் கடற்பரப்பில் இருந்து வடகிழக்கே 1.9 கடல் மைல் தொலைவில் படகு கவிழ்ந்ததாக தமது துறைக்கு நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 17) தகவல் கிடைத்ததாகவும், அதனைத்தொடர்ந்து, நேற்று நண்பகல் முதல் தேடுதல் மற்றும் மீட்புப் பணியை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

படகில் மூன்று மீனவர்கள் இருந்ததாகவும், நேற்று அதிகாலை 3 மணியளவில் படகுக்குள் தண்ணீர் வர ஆரம்பித்ததும், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் கடலில் குதித்ததாகவும் அவர் கூறினார்.

“இந்தோனேசிய பிரஜைகளான மற்ற இருவரும், மிதக்கும் ஒரு பீப்பாயை பிடித்துக் கொண்டனர், ஆனால் பாதிக்கப்பட்ட உள்நாட்டவர் வலுவான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 56 வயதுடையவர், குவாந்தான், பகாங்கைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஹூத்தான் மெலிந்தாங்கிற்கு அருகிலுள்ள மீன்பிடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here