தாவாவில் இயங்கிவந்த சட்டவிரோத டீசல் விநியோக மையத்தில் சோதனை; 2,000 லிட்டர் மானிய விலையில் டீசல் பறிமுதல்

கோத்தா கினாபாலு, செப்டம்பர் 19 :

சபாவின் கிழக்கு கடற்கரை மாவட்டமான தாவாவில் உள்ள கம்போங் கோபுடாவில், இன்று திங்கள்கிழமை (செப்டம்பர் 19) அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சட்டவிரோதமாக இயங்கிவந்த மானிய விலை டீசல் விநியோக மையத்தினை கண்டுபிடித்தனர். மேலும் அங்கிருந்து 2,000 லிட்டர் மானிய விலை டீசல் கைப்பற்றப்பட்டது.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் அமலாக்க அதிகாரிகள், காலை 10 மணியளவில் சட்டவிரோத விநியோக மையத்தின் தொழிலாளி என்று நம்பப்படும் உள்ளூர் நபரை கைது செய்தனர், அங்கு அவர்கள் ஒரு லோரி, ஒரு மின்சார பம்ப் மற்றும் ஒரு பெரிய குழாய் ஆகியவற்றுடன் ஒரு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த 2,090 லிட்டர் டீசலைக் கைப்பற்றினர்.

அனைத்து உபகரணங்களும் வாகனங்களும் மானியத்துடன் கூடிய டீசலின் சட்டவிரோத விற்பனைக்கு பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது என்று அமைச்சகத்தின் சபா அமலாக்கத் தலைவர், சுல்பாமி மாட் உடி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட டீசலின் மதிப்பு RM35,993.50 என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

புத்ராஜெயாவில் உள்ள அவர்களின் அமலாக்கப் பிரிவிலிருந்து, இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த ஆரம்பத் தகவலைப் பெற்றதாகவும், பின்னர் சோதனைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு உளவு நடவடிக்கை மூலம் தகவல் சேகரிப்பை மேற்கொண்டதாகவும் சுல்பாமி கூறினார்.

“முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அந்த இடத்தில் உள்ள தொழிலாளி அந்த இடத்தில் மானிய விலையில் எரிபொருளை சேமிப்பதற்கான எந்த அங்கீகார ஆவணங்களையும் கொண்டிருக்கவில்லை மற்றும் அவர் செல்லுபடியாகும் உரிமங்களையும் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

1961 ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச் சட்டம் பிரிவு 21 இன் கீழ், ஒரு குற்றத்தைச் செய்யும் நோக்கத்துடன் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காக இவ் வழக்கு விசாரிக்கப்படுவதாக சுல்பாமி கூறினார்.

செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் வர்த்தகம் செய்ததற்காகவும், மானியத்துடன் கூடிய எரிபொருளை சட்டவிரோதமாக சேமித்து வைத்ததற்காகவும் அந்த மையத்தின் நடத்துநர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மானிய விலையில் எரிபொருளை சட்டவிரோதமாக விநியோகிப்பது என்ற சந்தேகத்தின் பேரில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றையும் தமது திணைக்களம் தற்காலிகமாக மூடியுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here