இங்கிலாந்தில் இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல்: இந்திய தூதரகம் கண்டனம்

இங்கிலாந்து நாட்டின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இரு பிரிவினர் இடையே நேற்று வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே, லீசெஸ்டர்ஷையர் பகுதியில் அமைந்துள்ள இந்து கோவில் ஒன்றுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கருப்பு உடை அணிந்த ஒரு நபர், இந்து கோவில் கட்டிடத்தின் மேல் ஏறி காவி கொடியை கீழே இறக்கியுள்ளார். இதனை கீழே நிற்கும் சிலர் ஆரவாரமிட்டபடி வரவேற்றனர். இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் லீசெஸ்டர்ஷையர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு லண்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இங்கிலாந்து அதிகாரிகளிடம் இந்த விவகாரம் பற்றி எடுத்து சென்று உள்ளோம்.

இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டுள்ளோம் என தெரிவித்து உள்ளது. லீசெஸ்டர் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய 15 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். மத வழிபாட்டு தலத்திற்கு வெளியே கொடி ஒன்றை இழுத்து அவமதிப்பு செய்தது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம் என லீசெஸ்டர் போலீசார் தெரிவித்து உள்ளனர். இதேபோன்று, ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷங்களை முழங்கியபடி இந்து குழுக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபடும் காட்சிகளும், வீடியோவாக வெளிவந்துள்ளன.

இந்த குழுக்கள், லெய்செஸ்டரில் உள்ள முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடி உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. லெய்செஸ்டரில் வன்முறை, ஒழுக்கக்கேடு அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்துவது போன்றவற்றை நாங்கள் சகித்து கொள்ளமாட்டோம். அமைதி மற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம் என போலீசார் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here