18-65 வயது ஆண்களுக்கு ரஷிய விமான நிறுவனங்கள் டிக்கெட் விற்பனை செய்ய மறுக்கிறதா?

உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளை ரஷியா மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரஷிய ராணுவத்திற்கு மிகப் பெரிய எண்ணிக்கையிலான வீரர்களைத் திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாட்டு மக்களிடம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தொலைக்காட்சி வாயிலாக நிகழ்த்திய உரையில், “ரஷிய ராணுவத்திற்கான அணி திரட்டல் இன்று முதல் தொடங்குகிறது. ராணுவத்தில் பணியாற்றி, பயிற்சிபெற்று தற்போது வேறு பணிகளில் உள்ள நாட்டு மக்கள் ராணுவ பணிக்கு மீண்டும் அழைக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அந்நாட்டு பாதுகாப்புத் துறை மந்திரி செர்கே சோய்கு, “ரஷியாவில் கூடுதலாக 3 லட்சம் வீரர்கள் போருக்கு திரட்டப்படுவர்” என்று தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு எதிராக ரஷியாவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ரஷியா முழுவதும் நேற்று நடந்த ஆர்ப்பாட்டங்களில் 1,300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 38 வெவ்வேறு நகரங்களில் நடந்த பேரணிகளில் குறைந்தது 1,332 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ரஷிய விமான நிறுவனங்களில் அந்நாட்டைச் சேர்ந்த 18 முதல் 65 வயது வரையிலான ஆண்களுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல டிக்கெட் விநியோகம் செய்ய மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சமூக வலைதளங்களில் பலர் உறுதிப்படுத்தி வருகின்றனர். ராணுவத்தில் இணையும் தகுதி உடைய வயதைக் கொண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம் ரஷிய பாதுகாப்புத்துறையின் அனுமதியை பெற்ற பிறகே இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என ஃபார்ச்யூன் பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here