அலோர் காஜா, செப்டம்பர் 27 :
டுரியான் துங்கலின் தாமான் அங்காசா நூரியில் உள்ள அவர்களது வீடு, இன்று செவ்வாய்கிழமை (செப்டம்பர் 27) அதிகாலை தீப்பிடித்து எரிந்ததில், ஒரு தாய் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் (அனைத்தும் பெண்கள்) தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்தனர்.
பாதிக்கப்பட்ட 50 வயதான லிலிவதி கஹருடின் கூறுகையில், அதிகாலை 1.40 மணியளவில் நடந்த சம்பவத்தின் போது, தமது வீட்டைத் தவிர, குடும்பத்திற்குச் சொந்தமான மூன்று கார்கள் மற்றும் ஒரு ஸ்கூட்டர் என்பன தீயில் எரிந்து நாசமானது என்றார்.
அப்போது வேலைகளைச் செய்து கொண்டிருந்த தனது 20 வயது மகள், ஏதோ எரிந்து மணக்கும் வாசனையை நுகர்ந்தார், உடனே அது என்ன வாசனை என பார்க்கச் சென்றபோது, ஏர் கண்டிஷனிங்கினால் தீ ஏற்பட்டதாக நம்பப்படும் தரைத்தளம் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
“அவளுடைய கூச்சல்களால் நான் விழித்தேன், அந்த நேரத்தில் விழித்திருந்த எனது மூத்த மகள் 23, தூங்கிக் கொண்டிருந்த எனது 15 வயது மூன்றாவது மகளை விரைவாக எழுப்பினாள். நாங்கள் அனவரும் வீட்டை விட்டு விரைந்து வெளியேறினோம்.
அப்போது நான் கார்களில் ஒன்றைப் பாதுகாக்க முயற்சித்தேன், ஆனால் நான் காரை நெருங்கியபோது, அதன் கண்ணாடி திடீரென வெடித்தது, நான் பயந்துப்போய் எனது திட்டத்தை கைவிட்டேன், ”என்று லிலிவதி இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வந்த போதிலும், பொங்கி எழுந்த தீப்பிழம்புகளால் வீட்டிற்குள் சென்று, எதையும் எடுக்க முடியவில்லை, மேலும் அந்த வீட்டின் கிட்டத்தட்ட 80 விழுக்காடு தீயில் அழிந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
இரண்டு கார்கள் மற்றும் ஒரு ஸ்கூட்டர் முற்றாக எரிந்துள்ளதாகவும், மற்றொரு கார் தீயில் சிறிதளவு எரிந்துள்ளதாகவும், பக்கத்து வீட்டுக்காரரின் காரும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், ஆயிர் கேரோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி, மூத்த துணைத் தலைவர், ஜஹ்ருல் அஷா மொக்தார் கூறுகையில், அதிகாலை 1.45 மணியளவில் தமது நிலையத்திற்கு அவசர அழைப்பு வந்தது, மேலும் 10 தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
“வந்தவுடன், 22×70 அளவுள்ள ஒரு இரண்டு அடுக்கு வீடு தீயில் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டோம். அதிகாலை 2.58 மணிக்கு நாங்கள் தீயை முற்றாக கட்டுக்குள் கொண்டுவந்தோம் ” என்று அவர் கூறினார்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்புகளைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, ”என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.








