ஹாட்யாயில் 87 கிலோ ‘ஷாபு’ போதைப்பொருளுடன் பிடிபட்ட 3 மலேசியர்கள் சரவாக்கைச் சேர்ந்தவர்கள்: காவல் துறை உறுதி!

கோலாலம்பூர்:

தாய்லாந்தின் ஹாட்யாய் நகரில் 87 கிலோ கிராம் ‘ஷாபு’ (Syabu – Crystal Methamphetamine) போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மூன்று மலேசிய ஆடவர்களும் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மலேசியக் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

பேங்காக்கில் இருந்து நாராதிவாட் நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் பயணம் செய்த இந்த மூவரையும் தாய்லாந்து அதிகாரிகள் சோதனையிட்டுப் போதைப்பொருட்களுடன் கைது செய்ததாகப் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN) இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் தெரிவித்தார்.

கைதான நபர்கள் கொண்டு சென்ற பயணப் பைகள் மற்றும் தோள்பைகளில் இருந்து RM4.3 மில்லியன் மதிப்பிலான 87 கிலோ கிராம் ஷாபு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

தாய்லாந்தின் ஹாட்யாய் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, ரயில்வே போலீஸ், சுற்றுலாப் போலீஸ் மற்றும் தாய்லாந்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் (ONCB Wilayah 9) ஆகியவை இணைந்து நடத்திய சோதனையில் இவர்கள் பிடிபட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்தப் போதைப்பொருள் மலேசியாவிலுள்ள ஒரு விநியோகக் கும்பலிடம் ஒப்படைக்கக் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்தப் போதைப்பொருளைக் குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு சேர்ப்பதற்காகச் சந்தேக நபர்கள் ஒவ்வொருவருக்கும் RM8,000 கூலியாக வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து அதிகாரிகள் இந்த நடவடிக்கை குறித்த முதற்கட்டத் தகவல்களை மலேசியப் போலீசாருடன் பகிர்ந்து கொண்டுள்ளதாகக் கூறிய டத்தோ ஹுசைன் ஓமார் கான், இரு நாட்டு காவல் துறையினரிடையே நல்லுறவு நிலவுவதாகவும், தாய்லாந்து நாட்டுச் சட்ட திட்டங்களின்படி அந்நாட்டு அதிகாரிகளின் விசாரணை தொடர மலேசியக் காவல் துறை முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here