நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இரண்டு வயது குழந்தை மரணம்

கோலக்கிராய், அக்டோபர் 3 :

லாதா ரேக் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்ததாக நம்பப்படும் இரண்டு வயது சிறுவனின் சடலம், அவர் விழுந்ததாகக் கூறப்படும் இடத்தில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் நீரில் மூழ்கிய நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவத்திற்கு முன்னர், குழந்தை தனது தந்தையுடன் வீட்டிற்கு வெளியே இருந்ததாகவும், அவர்களின் வீடு நீர்வீழ்ச்சி பகுதிக்கு அருகாமையில் இருந்ததாகவும் நம்பப்படுகிறது .

சிறிது நேரம் கழித்து, தனது மகன் வீட்டின் பகுதியில் இல்லை என்பதை தான் உணர்ந்ததாகவும், அவர் தவறி விழுந்து நீரில் மூழ்கியிருக்கலாம் என்று தந்தை நம்பியதாகவும் தெரிவித்தார்.

கோலாக்கிராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், நிக் அஹ்மட் அஃப்ஷாம் நிக் பா கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக தமக்கு நண்பகல் 1.53 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், பிற்பகல் 2.28 மணிக்கு அந்த இடத்திற்கு வந்ததாகவும் கூறினார்.

“அழைப்பைப் பெற்றவுடன், கோலாக்கிராய் அதிகாரிகள் உட்பட மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள் ஒரு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.

“சில மணிநேர தேடுதலின் பிறகு, இன்று பிற்பகல் 5 மணியளவில் குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here