கோபத்தில் பெண்ணை அறைவது, உதைப்பது, செருப்பால் அறைவது போன்ற காணொளி தொடர்பில் இணையவாசிகள் விசனம்

கோத்தா கினாபாலு, அக்டோபர் 31 :

இளம்பெண் ஒருவரை செருப்பால் அறைவது, பலமுறை உதைத்து, அவரை அறைந்த ஒரு காணொளிப் பதிவு இணையவாசிகளின் கோபத்தை கிளப்பியுள்ளது.

18 வினாடிகள் கொண்ட அந்த காணொளியில், ஆடவர் ஒருவர் அந்த பெண்ணை சுவரில் தள்ளி, அவரை பலமுறை முகத்தில் அறைந்ததைக் காட்டுகிறது. பின்னர் அந்த நபர் மீண்டும் அப்பெண்ணை உதைத்து தாக்கினார், பின் அவரது முகத்தில் செருப்பால் பல முறை அறைந்தார். இதனால், அந்தப் பெண் வலிதாங்காது சுவரில் தலையைப் பிடித்துக் கொண்டு அழுதார்.

மேலும் இந்த சம்பவத்தை சிரித்தபடி கேமராவில் பதிவு செய்த நபரின் செயலையம் வலைத்தளவாசிகள் கடுமையாக சாடினர்.

சம்பவம் எப்போது நடந்தது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் சம்பவம் நடந்த இடம் கோத்தா கினாபாலுவில் உள்ள ஒரு பேரங்காடி எனத் தெரிகிறது.

கோத்தா கினாபாலு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஜைதி அப்துல்லாவைத் தொடர்பு கொண்டபோது, ​​கோத்தா கினாபாலுவில் நடந்த சம்பவம் உண்மையா என்பது குறித்து இதுவரை காவல்துறைக்கு புகார் எதுவும் வரவில்லை என்று கூறினார்.

எவ்வாறாயினும், வைரலான காணொளி தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், சம்பவம் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here