பிரதமர் வேட்பாளர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்தான் ; ஜோகூர் முதன்மை தலைவர்கள் முழு ஆதரவு

பத்துபகாட், நவ. 14-

நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால் அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் 10ஆவது பிரதமராவதற்கு ஜோகூர் மாநிலத்தின் மூன்று முக்கியத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராவதற்கு மசீச தொடர்ந்து ஆதரவு வழங்கும். அந்த ஆதரவில் மாற்றம் இருக்காது என அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார்.

வருங்காலத்தில் பெரும் வெற்றியை அடைவதற்கு நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் வலிமை இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு உள்ளதாக மசீச நம்புகின்றது. இதன் அடையாளமாக அவருக்கு ஆதரவு வழங்குகின்றோம்.

முன்னதாக பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை அம்னோ உச்சமன்றம் முன்மொழிந்தபோது,மசீச அதற்கு ஆதரவு வழங்கியது.

அவர் நாட்டின் 9ஆவது பிரதமராக மட்டும் பொறுப்பேற்கவில்லை. மாறாக, 10ஆவது பிரதமராகவும் பதவி ஏற்பார் என்று ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்றத் தொகுதி மக்களுடன் நடைபெற்ற பிரதமர் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது வீ கா சியோங் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி, மாநில தேசிய முன்னணி தொடர்புக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ ஹஸ்னி முகமட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பேசிய ஹஸ்னி முகமட், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாட்டின் 10ஆவது பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு ஜோகூர் மாநில அம்னோ தொகுதி தலைமைத்துவம் அனைத்தும் முழு ஆதரவு வழங்குவதாகக் கூறினார்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற அந்தந்தத் தொகுதி அம்னோ மாநாடுகளில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார் அவர்.

இதற்கிடையே, முன்னதாக வீ கா சியோங், ஹஸ்னி முகமட் ஆகிய இரு முதன்மை தலைவர்கள் முன்வைத்த நிலைப்பாட்டிற்கு தாம் முழு ஆதரவு வழங்குவதாக மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் கருத்துரைத்தார்.

குறிப்பாக, நாட்டின் 9ஆவது பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு ஜோகூர் மாநிலத்தின் மேம்பாடு – நலத் திட்டங்களுக்காக பல்வேறு நிலையிலான நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளார் என்றும் ஓன் ஹபீஸ் சீட்டிக்காட்டினார்.

இத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று அரசாங்கம் அமைக்குமாயின் அதில் பிரதமர் பதவிக்கான முதல் தேர்வு இஸ்மாயில் சப்ரி யாக்கோப்தான், வேறு யாரும் கிடையாது.

ஆனாலும் இம்முறை தேர்தலில் தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர் தேர்வு விவகாரத்தை தேவையில்லாமல் குழப்பி எதிர்க்கட்சித் தரப்பினர் லாபம் பார்க்க முனைகின்றனர்.

என் கட்சி (அம்னோ) தலைவர்தான் பிரதமராவார் என்று எதிர்த்தரப்பினர் கூறி வருகின்றனர். இது முற்றிலும் பொய். காரணம் அம்னோ மட்டுமல்லாது ம.இ.கா., மசீச என தேசிய முன்னணி உருபு கட்சிகளும் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்குத்தான் முழு ஆதரவு வழங்குகின்றனர்.

எங்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி பிளவை ஏற்படுத்தும் வெறுப்பு அரசியலுக்கு செவிமடுக்காதீர் என்றும் ஓன் ஹபீஸ் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here